மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை – பெருந்தொகையான இலங்கையர்களுக்கு ஆபத்து
மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக 4 நாடுகளில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்களின் தொழில் ஆபத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, இஸ்ரேலில் 12 ஆயிரம், ஜோர்தானில் 15 ஆயிரம், லெபனானில் 7500, எகிப்தில் 500 இலங்கைத் தொழிலாளர்கள் பணிபுரிவதாகக் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யுத்த மோதல்கள் உருவாகும் பட்சத்தில் அந்த நாடுகளில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களையும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை பணியாளர்கள்
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு சகல வசதிகளும் செய்து தரப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை அழைத்து வருவதற்கு ஏற்கனவே 5 மில்லியன் டொலர்களுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் கானி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நாட்டில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்கான முன் தயாரிப்பாக தேசிய பாதுகாப்பு குறித்த குழு, பொருளாதாரத்திற்கான குழு, மேலும், இரண்டு குழுக்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட உயர்மட்டக் குழுவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.