பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை:போராட்டத்தில் 52 பேர் படுகொலை
பங்களாதேஷில் (Bangladesh) பிரதமர் ஷேக் ஹசீனாவை (Sheikh Hasina) பதவி விலக வலியுறுத்தி மாணவ அமைப்பினர் நடத்திய வன்முறை போராட்டத்தில் 52பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவர்களுக்கும், ஆளுங்கட்சியினர்,மற்றும் காவல்துறையினருக்கும் இடையே கடந்த மாதம் நடைபெற்ற வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இதற்கு நீதி கேட்டும், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தியும் தலைநகர் டாக்காவில் (Dhaka) ஆயிரக்கணக்கானோர் இன்று (04) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இணைய சேவைகள்
காவல்துறைக்கும், பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரி அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருவோருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
வன்முறை மோசமடைந்து வரும் நிலையை கருத்தில் கொண்டு தலைநகர் டாக்காவில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் முன்னாள் ராணுவ அதிகாரிகளும் மேலும், திரைப்பட நட்சத்திரங்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் உட்பட பெரும்பாலானோர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.