இனி குட் மார்னிங் பதிலாக ஜெய் ஹிந்த் சொல்ல வேண்டும் – பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு
பள்ளிகளில் குட் மார்னிங் பதிலாக ஜெய் ஹிந்த் சொல்ல வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
குட் மார்னிங்
பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழையும் போது மாணவ மாணவிகள் எழுந்து நின்று குட் மார்னிங், குட் ஈவினிங் சொல்வது வழக்கம். இது இந்தியா முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் ஹரியானா மாநில பள்ளிக்கல்வி துறை இது தொடர்பாக ஹரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
ஜெய்ஹிந்த்
இந்த சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்க்கும் வகையில், சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 15 முதல் பள்ளிகளில் குட் மார்னிங், குட் ஈவினிங் சொல்வதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும். ஜெய்ஹிந்த் என சொல்வதன் மூலம் மாணவர்களிடையே ஒழுக்கம் வளரும், மொழி, கலாச்சார வேற்றுமை மறந்து ஒற்றுமை வளரும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக பேசிய பள்ளி கல்வி துறை அமைச்சர் சீமா த்ரிகா, “ஜெய்ஹிந்த் சொல்வதன் மூலம் மாணவர்களிடையே தேசிய ஒற்றுமை, தேசபக்தி ஆகியவற்றை வளர்க்க உதவும் என்றும், எல்லை காக்கும் வீரர்களை நினைவுகூர வேண்டும் என்றும் விரும்புகிறோம். ராணுவ வீரர்களை கவுரவிப்பதன் மூலம், மாணவர்கள் இயல்பாகவே ஒழுக்கமானவர்களாக மாறுவார்கள். அரசு ஊழியர்களும் ஹாய், ஹலோ, குட் மார்னிங் என சொல்வதற்கு பதிலாக ‘ஜெய் ஹிந்த்’ என்று சொல்லத் தொடங்க வேண்டும்.”என பேசியுள்ளார்.