;
Athirady Tamil News

நாகை – யாழ் கப்பல் சேவை 16 ஆம் திகதி ஆரம்பம்; இன்று நள்ளிரவு முதல் டிக்கெட் முன்பதிவு!

0

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை , யாழ்ப்பாணம் – காங்கேசன் துறைமுகத்துக்கு வரும் 16 ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதாக தனியார் கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இன்று நள்ளிரவு முதல் டிக்கெட் முன்பதிவு
பின்னர் , புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை, குறைந்த அளவிலான பயணிகள் வருகை ஆகியவற்றைக் காரணம் காட்டி சேவை தொடங்கிய சில நாட்களிலேயே கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க இருப்பதாக தனியார் கப்பல் நிறுவனம் அறிவித்தது. அதற்காக அந்தமானில் இருந்து சிவகங்கை என்ற பெயரிலான கப்பல் கடந்த வாரம் நாகை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து இலங்கைக்கு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், வரும் 16-ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதாக கப்பல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், கப்பலில் பயணிக்க விரும்புகிறவர்கள் sailindsri.com என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் இன்று நள்ளிரவு முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு தொடங்கிய வேகத்திலேயே சேவை நிறுத்தப்பட்டதால் அதிருப்தியில் இருந்த சுற்றுலா பயணிகள், மீண்டும் கப்பல் சேவை தொடங்க இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.