;
Athirady Tamil News

மன்னாரில் உண்ணாவிரதத்தில் குதித்த வைத்தியர்

0

புதிய இணைப்பு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(13) காலை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கறுப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலாம் இணைப்பு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவுக்கு நீதி கேட்டு அந்த வைத்தியசாலை முன்பாக இன்று(13) காலை 9 மணிக்குக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி இறந்த சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவிதநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தாமதிக்கும் நீதி மறக்கப்பட்ட நீதியாகவே நாம் கருதுகின்றோம்.

ஆகவே, வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் இறந்தவருக்கு நீதி வேண்டும். இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக சிந்துஜாவுக்கு நீதி வேண்டி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(13) காலை 9 மணிக்குக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதால் இந்தப் போராட்டத்தில் தார்மீக அடிப்படையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பதுடன் அனைத்து உறவுகளையும் அணிதிரளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.