;
Athirady Tamil News

ட்ரம்பின் சொத்துப் பெறுமதியிலும் வீழ்ச்சியை ஏற்படுத்திய கமலா ஹரிஸின் வருகை

0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது புதிய போட்டியாளரான கமலா ஹரீஸை எதிர்கொள்ள திணறி வருகிறார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிட்டபோது, 81 வயதான பைடனின் தடுமாற்றங்கள், மறதி போன்றவற்றை தூக்கிப்பிடித்து அவருக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார் 78 வயதான டொனால்ட் ட்ரம்ப்.

ஜூன் 27ஆம் திகதி நடைபெற்ற பைடன், ட்ரம்ப் விவாதத்தின்போது பைடனின் செயற்பாடுகள் மிக மந்தமாக இருந்ததால் ஜனநாயகக் கட்சி பெரும் பின்னடவை எதிர்கொண்டது. அதையடுத்து ட்ரம்பின் வெற்றி தடுக்க முடியாது என்றே பலர் கருதினர். கருத்துக் கணிப்புகளில் பைடனை விட ட்ரம்ப் முதலிடம் பெற்றிருந்தார்

ஆனால், ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து ஜோ பைடன் ஒதுங்கி, அக்கட்சியின் வேட்பாளராக கமலா ஹரீஸ் அறிவிக்கப்பட்ட பின்னர் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

ஜோ பைடனை விட கமலா ஹரிஸை தோற்கடிப்பது இலகுவானது என்றுதான், கமலா ஹரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் ட்ரம்ப் முதலில் கூறினார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தவாறு களநிலைவரம் இல்லை. கமலா ஹரிஸின் வருகையால் தனது பிரச்சாரத் திட்டத்தையே மாற்றியகை;க வேண்டிய நிர்ப்பந்தம் ட்ரம்ப்புக்கு ஏற்பட்டது.

இது குறித்து ட்ரம்ப்பும் ஆத்திரமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பைடன் விலகிவிட்டதால் அனைத்து நடவடிக்கைகளையும் மீள ஆரம்பிக்க வேண்டியுள்ளதால், பைடனுக்கு எதிரான பிரச்சாரத்துக்காக குடியரசுக் கட்சி செலவிட்ட பணம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ட்ரம்ப் கூறினார்.

தனது சொந்த சமூக வலைத்தளமான ‘ட்ரூத் சோஷல்’ தளத்தில் ஜூலை 22 ஆம் திகதி ட்ரம்ப் வெளியிட்ட பதிவொன்றில், ‘நேர்மையற்ற ஜோ பைடனுக்கு எதிராக பெருமளவு நேரத்தையும் பணத்தையும் செலவிட நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். இப்போதும் நாம் அனைத்தையும் மீள ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இந்த மோசடிக்காக குடியரசுக் கட்சிக்கு பணம் மீளளிக்கப்பட வேண்டியதில்லையா?’ என ட்ரம்ப் கேள்வி எழுப்பியிருந்தார்.

நன்கொடைகள்

பைடன் போட்டியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தி, நன்கொடை வழங்குவதை இடைநிறுத்தி வைத்திருந்த அவரின் சொந்தக் கட்சி நன்கொடையாளர்கள் கமலா ஹரிஸின் வருகையால் பெரும் உற்சாகமடைந்தனர். இதனால் 24 மணித்தியாலங்களில் 81 மில்லியன் டொலர்கள் கமலா ஹரிஸின் பிரச்சாரத்துக்கு திரட்டப்பட்டது.

அதிக நன்கொடை கிடைப்பது வேட்பாளருக்கான ஆதரவு நிலையை ஊகித்துக் கொள்வதற்கான ஓர் அளவுகோலாக கருதப்படுவதும், அமெரிக்கத் தேர்தல்களின் வேட்பாளர்கள் தமக்கு கிடைத்த நன்கொடைகளை பெருமையுடன் வெளிப்படுத்திக் கொள்வதற்கு ஒரு காரணமாகும்.

கடந்த ஜூலை மாதத்தில் தனக்கு 138.7 மில்லியன் டொலர் நன்கொடை கிடைத்ததாக டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரக் குழு அறிவித்தது. சில தினங்களில் கமலா ஹரிஸின் பிரச்சாரக் குழு ஜூலை மாத சேகரிப்பை அறிவித்தபோது அது ட்ரம்பின் கிடைத்த தொகையைவிட இரு மடங்கை விட அதிகமாக இருந்தது. ஜூலையில் 310 டொலர் கிடைத்ததாக அக்குழு அறிவித்தது. இதில் 200 மில்லியனுக்கும் அதிகமான தொகை கமலா ஹரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள் திரட்டப்பட்ட தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பின் சொத்துக்களின் பெறுமதி வீழ்ச்சி

பிரச்சாரத்துக்கான நிதி திரட்டலில் கமலா ஹரிஸ் தற்போது முன்னிலையில் இருக்கும் நிலையில், அவர் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இறங்கிய பின் ட்ரம்பின் தனிப்பட்ட சொத்துக்களிலும் 900 மில்லியன் டொலர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால். அது உண்மை.

டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ட்ரம்புக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் 2021 ஒக்டோபரில் ட்ரூத் சோஷல் எனும் டுவிட்டர் பாணி சமூக வலைத்தளத்தை ட்ரம்ப் ஸ்தாபித்தார். இதன் உரிமையாளராக ட்ரம்ப் மீடியா அன்ட் டெக்னோலஜிஸ் குரூப் எனும் நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தில் 1114.75 மில்லியன் பங்குகளை வைத்திருக்கிறார் ட்ரம்ப்.

கமலா ஹரிஸ் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் களமிறங்கிய பின்னர், மேற்படி நிறுவனத்தில்; ட்ரம்புக்குச் சொந்தமான பங்குகளின் பெறுமதி 23 சதவீதம் குறைந்துவிட்டது.

ஜூலை 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பைடன் போட்டியிலிருந்து விலகியதுடன், கமலா ஹரிஸை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார். அதற்கு முந்தைய இறுதி பங்குச்சந்தை நாளான ஜூலை 19 ஆம் திகதி மேற்படி நிறுவனத்திலுள்ள ட்ரம்பின் பங்குகளின் 4 பில்லியன் டொலர்களைவிட சற்று அதிகமாக இருந்தது. ஆனால், அதன்பின் அப்பங்குகளின் பெறுமதி 3.1 பில்லியன் டொலர்களாக குறைந்துவிட்டது.

ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தனது தீர்மானங்களை அறிவிப்பதற்கு டுவிட்டரை பயன்படுத்தியவர் ட்ரம்ப், அவர் ஜனாதிபதி தேர்தலில் வென்றால், ட்ரூத் சோஷல் வலைத்தளமே ஜனாதிபதியின் பிரதான தொடர்பாடல் தளமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதனால் மேற்படி நிறுவனத்pன் பங்குகளின் பெறுமதி அதிகரிக்கக்கூடும். இந்நிலையில், ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகுவாரா என்பது தொடர்பாக பங்குச்சந்தை வர்த்தகர்களின் ஒரு பந்தய விடயமாக ட்ரூத் சோஷல் நிறுவன பங்கு விலைகளின் ஏற்ற இறக்கங்கள் கருதப்படுகின்றன.

கடந்த ஜூன் இறுதியில் ஜோ பைடனின் மந்தமான விவாதத்தின் பின்னர் மேற்படி நிறுவனப் பங்குகளின் விலை தற்காலிகமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உப ஜனாதிபதி வேட்பாளர்கள்

உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவும் டொனால்ட் ட்ரம்புக்கு அதிகம் சாதகமாக அமையவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான செனட்டர் ஜே.டி. வான்ஸை தனது உப ஜனாதிபதி வேட்பாளராக ஜூலை 15 ஆம் திகதி ட்ரம்ப் அறிவித்தார். செய்திருந்தார்.

ஜோ பைடனுடான போட்டியை கருத்திற்கொண்டே வான்ஸை ட்ரம்ப் தெரிவு செய்தார். ஆனால், அடுத்த ஒரு வாரத்துக்குள் தேர்தலிலிருந்து பைடன் விலகி, கமலா ஹரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் ட்ரம்பின் தந்திரோபாயங்கள் கேள்விக்குறியாகிவிட்டன.

அத்துடன், ஜே.டி. வான்ஸ் புதிய வாக்காளர்களை கவரும் வகையில் இல்லை. ஏற்கெனவே உள்ள ட்ரம்பின் தீவிர ஆதரவாளர்களை மேலும் தூண்டிவிடக்கூடியராகவே வான்ஸ் உள்ளார் என விமர்சனங்கள் உள்ளன.

உதாரணமாக, நிக்கி ஹாலே போன்ற ஒருவரை உப ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப் தெரிவுசெய்திருந்தால் அவர் மிதவாத கொள்கையுடைய வாக்களர்களையும் கவர்ந்திருப்பார் என சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உப ஜனாதிபதி வேட்பாளர்களில் மிக மோசமான தெரிவு வான்ஸ் என ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தன்னை இனங்காட்ட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

‘இக்கட்டடத்தில் எமது தரப்பிலுள்ளவர்களிடம் கேட்டால், 10 பேரில் 9 பேர் அவர் ஒரு மோசமான தெரிவு எனக் கூறுவார்கள்’ என மற்றொரு குடியரசுக் கட்சி எம்.பி. தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களிடம் சிறந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்த வான்ஸ் தவறியமை குறித்து ட்ரம்ப் அதிருப்தியடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மறுபுறம் கமலா ஹரிஸ் தனது உப ஜனாதிபதி வேட்பாளராக மினேசோட்டா மாநில ஆளுநர் டிம் வால்ஸை தெரிவுசெய்துள்ளார். 60 வயதான டிம் வால்ஸ், இராணுவ வீரராகவும் ஆசிரியராகவும் பணியாற்றியவர். கமலா ஹரீஸ் தன்னை இந்தியராகவும் கறுப்பினத்தராகவும் அடையாளப்படுத்தும் நிலையில், வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்கு டிம் வால்ஸ் உதவுவார் எனக் கருதப்படுகிறது.

2016ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஹிலாரி கிளின்டனைவிட அதிக மக்கள் பங்குபற்றும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியவர் டொனால்ட் ட்ரம்ப். (2020 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரங்கள் கொவிட் 19 பெருந்தொற்று பரவல்காலத்தில் நடைபெற்றன. அதனால் வேட்பாளர்கள், நேரடி பிரச்சாரக் கூட்டங்களை குறைத்துக்கொண்டனர்.)

ஆனால், கடந்த வாரம் கமலா ஹரிஸும், டிம் வால்ஸும் பிலடெல்பியா, பீனிக்ஸ் நகரங்களில் நடத்திய பிரச்சாரக் கூட்டங்களில் 14,000 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். சுமார் ஒரு தசாப்தகாலத்தில் ட்ரம்பின் பிரச்சாரக் கூட்டங்களுக்கே இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரள்வார்கள் என்ற அபிப்பிராயம் நிலவியது. தற்போது கமலா ஹரிஸ், டிம் வோல்ஸ் அதனையும் தகர்க்க ஆரம்பித்துள்ளனர்.

கருத்துக்கணிப்புகளிலும் தற்போது டொனால்ட் ட்ரம்ப்பைவிட கமலா ஹரிஸ் முன்னிலையில் உள்ளார். ஆனால், இத்தேர்தலுக்கு இன்னும் சுமார் 3 மாதங்கள் உள்ளதையும் கருத்திற்கொள்ள வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.