அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்
அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனைகளில் அரசியல் நோக்கமில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், முடிந்தவரை மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிது காலமாக கோரிக்கைகளை பரிசீலித்து வந்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.சேனவிரத்ன தலைமையிலான நிபுணர் குழு வழங்கிய பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதையும் அவர் நினைவூட்டினார்.
முன்மொழியப்பட்ட தீர்வுகள்
இதேவேளை, வாழ்க்கை நிலைமைகள், பொருளாதார நிலைமைகள், பணம் செலுத்தும் திறன் போன்ற அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தி மேற்படி குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பல பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் நியமிக்கப்பட்ட குழுவினால் முன்மொழியப்பட்ட தீர்வுகள் அடுத்த அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.