;
Athirady Tamil News

தாய்லாந்து பற்றிய சுவாரஸ்ய தகவல்களும் அறியப்படாத உண்மைகளும்

0

தென்கிழக்காசியாவில் ஐரோப்பியக் குடியேற்றம் இடம்பெறாத நாடான தாய்லாந்தை பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வரலாறு
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு தான் தாய்லாந்து (Thailand) ஆகும். இந்த நாட்டிற்கு வடக்கில் மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகளும், கிழக்கில் லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளும், தெற்கில் தாய்லாந்து வளைகுடா, மலேசியா ஆகிய நாடுகளும், மேற்கில் அந்தமான் ஆகியவையும் உள்ளன.

தென்மேற்கே அந்தமான் கடலில் இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளும் உள்ளன. இந்த நாட்டின் மன்னர் தான் அரசுத் தலைவரும், இராணுவப் படைகளின் தலைவரும், பௌத்த மதத்தை மேனிலைப்படுத்துபவரும் ஆவார்.

இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 513,000 km2 ஆகும். மொத்தப் பரப்பளவின் அடிப்படையில் தாய்லாந்து 51 -வது நாடு ஆகும்.

அதுமட்டுமல்லாமல், மக்கள்தொகை அடிப்படையில் 64 மில்லியன் மக்களுடன் தாய்லாந்து 20- வது இடத்தில் உள்ளது.

இந்த நாட்டின் தலைநகர் பாங்காக் ஆகும். இது தான் அரசியல், வணிக, தொழிற்துறை மற்றும் கலாசார மையமாகவும் விளங்குகிறது. முக்கியமாக நாட்டில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் இங்கு தான் வாழ்கின்றனர்.

இந்த நாட்டில் 5 சதவீதம் தாய் இனத்தவரும், 14 சதவீதம் சீனரும் 3 சதவீதம் மலாய் இனத்தவரும் உள்ளனர்.

மொழி மற்றும் மதம்
தாய்லாந்து நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி தாய் மொழியாகும். ஆனால், பள்ளிகளில் ஆங்கிலம் தான் கட்டாய கல்வி மொழியாக உள்ளது. 2011 -ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 62 மொழிகள் இந்த நாட்டில் பயன்பாட்டில் உள்ளது.

இங்குள்ள மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 95 சதவீத மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். இங்கு, 4000 -க்கும் மேற்பட்ட புத்த கோவில்கள் உள்ளது.

இங்கு, மொன், கெமர், மற்றும் பல்வேறு மலைவாழ் இனங்களும் சிறுபான்மையினமாக இருக்கின்றனர். இங்கு, 2.2 மில்லியன் சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத இடம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர்.

இங்குள்ள பிரபலமான உணவாக நூடுல்ஸ், லாவோ சாலட், அரிசியில் ஒருவகையான உணவு ஆகியவை உள்ளது. இந்த நாட்டின் கரன்சி தாய் பாத் ஆகும்.

இந்த நாட்டில் பேட்மிட்டன், கால்பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகள் பிரபலமாக நடத்தப்பட்டு வருகிறது.

பொருளாதாரம்
1985 முதல் 1996 -ம் ஆண்டு வரை தாய்லாந்தின் பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் காணப்பட்டது. தற்போது, நல்ல தொழில் வளமிக்க நாடாகவும், ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடாகும் தாய்லாந்து திகழ்கிறது.

இந்த நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய அங்கமாக இருக்கிறது. மேலும், இந்த நாட்டின் வருவாய் 6 சதவீதம் சுற்றுலா துறையில் இருந்து தான் கிடைக்கிறது.

2013 -ம் ஆண்டில் உலக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்த பட்டியலில் முதலிடத்தில் தாய்லாந்து உள்ளது மேலும், தனது பாரம்பரிய வணிக தொழிலை சீனா முதல் இந்தியா வரை, ஈரான் முதல் அரபு நாடுகள் வரை விரிவுபடுத்தியுள்ளது.

அரசியல்
தாய்லாந்து நாட்டில் தற்போது அரசியல் சட்ட முடியாட்சியின் அடிப்படையில் அரசியல் நடைபெற்று வருகிறது. நாட்டின் அரசுத் தலைவராக பிரதமரும், நாட்டுத் தலைவராக மரபுவழி அரசரும் உள்ளனர்.

1932 -ம் ஆண்டில் முழுமையான மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்போது இருந்து தாய்லாந்து 17 அரசியலமைப்புச் சட்டங்களைக் கண்டுள்ளது.

பின்னர், 1973 -ம் ஆண்டில் மக்களாட்சி பலமுறை ஆட்டம் கண்டது. இதையடுத்து, 1976 -ம் ஆண்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதனைதொடர்ந்து, 1980 -களில் பிரதமராக பதவியேற்ற பிரேம் தின்சுலாநந்தா, மக்களாட்சியைப் படிப்படியாகக் கொண்டு வந்தார்.

அதன் பின்னர் ஆட்சி மாறி மாறி 2006 செப்டம்பர் 19 -ல் ஆட்சியைக் ராணுவம் கைப்பற்றியது. அப்போது அரசியலமைப்பை இடைநிறுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து ராணுவ ஆட்சியை அமைத்தது.

தமிழர்கள்
தாய்லாந்து நாட்டில் தமிழ் பின்புலத்துடன் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே அரசியல், வணிக, பண்பாடு விடயங்களில் தொடர்பு உண்டு.

பழங்காலத்தில் தமிழ்வழி அரசர்களின் ஆட்சியில் தாய்லாந்து இருந்தாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் சில தமிழ் மொழியில் உள்ளன.

இங்கு நடக்கும் சடங்குகளில் ஓதப்படும் மந்திரமானது திருப்பாவை, திருவம்பாவை போன்ற தமிழ் தேவாரங்களில் ஓதப்படுகிறது.

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே கடல்வழியாக தாய்லாந்துக்கு தமிழர்கள் வணிகம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டின் பண்பாடு, மரபு ஆகியவை அங்கு ஒரே மாதிரியாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

தங்க வணிகத்தில் தாய்லாந்து சிறந்து விளங்கியதால் அதனை சுவர்ண பூமி என்று தமிழர்கள் அழைக்கின்றனர். இன்றுவரை பாங்காக்கில் உள்ள மிகப்பெரிய விமான நிலையத்தின் பெயர் சுவர்ண பூமி என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 18 -ம் நூற்றாண்டின் காலப்பகுதியின் குருக்கள் வம்சாவளிகள், வாமனமுனி என்றபெயரில் அரச குருக்களாக தொடர்ந்துள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தை சேர்ந்த புரோகிதர்கள் தாய்லாந்தில் 21 தலைமுறைகளாக புரோகிதம் செய்து வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நாட்டில் தமிழ்நாட்டின் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் ஊஞ்சல் திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும், தாய்லாந்தில் மாரியம்மன் கோயில், சிவன் கோயில் ஆகியவை உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.