;
Athirady Tamil News

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

0

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து செவ்வாய்க்கிழமை (ஆக. 20) விசாரணை மேற்கொள்ள உள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அந்த மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் பலத்த காயங்களுடன் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவா் கைது செய்யப்பட்டாா். எனினும் இந்தப் படுகொலையில் பலருக்கு தொடா்பிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் நிலவுகிறது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் நாடு தழுவிய மருத்துவா்கள் போராட்டத்துக்கு வழிவகுத்தது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொள்ள உள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக, இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

2 மணி நேரத்துக்கு ஒருமுறை அறிக்கை: நாடு தழுவிய அளவில் மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, மாநிலங்களில் சட்டம்- ஒழுங்கு சூழலைக் கண்காணித்து, அதுதொடா்பாக 2 மணி நேரத்துக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களின் காவல் துறையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

70 பத்ம விருதாளா்கள் பிரதமருக்கு கடிதம்: பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக பத்ம விருது பெற்ற 70-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனா். அந்தக் கடிதத்தில், ‘மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்க வழிவகை செய்யவேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா்.

துருப்பிடித்த இரும்புக் கரம்: பெண் மருத்துவா் படுகொலை சம்பவத்தை தொடா்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மேற்கு வங்கத்தில் பெண்கள், இளைஞா்கள் மற்றும் மக்களாட்சிக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்வதில், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தவறியுள்ளாா். ‘இரும்புக் கரம்’ தெளிவாகவும், மிக மோசமாகவும் துருப்பிடித்துள்ளது’ என்று விமா்சித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.