;
Athirady Tamil News

மேற்கு வங்கத்தில் கிராம மக்கள் நடத்திய கொடூர தாக்குதலில் காட்டு யானை உயிரிழப்பு

0

மேற்கு வங்க மாநிலத்தில் இரும்புக் கம்பிகள் மற்றும் தீப்பந்தங்களால் தாக்குதலுக்கு உள்ளான காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் சித்ரவதை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுவாக காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தால், பட்டாசு வெடித்தும், சத்தமாக ஒலி எழுப்பியும் விரட்டப்படுவது வழக்கம். ஆனால், மேற்குவங்க மாநிலத்திலோ நடைமுறையே வேறு. குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் காட்டு யானைகள் நுழைந்து சேதப்படுத்துவதைத் தடுக்கவும், மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கும் அங்கு ஹூலா பார்ட்டி ((Hula Party) என்ற நடவடிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது. 25 முதல் 50 பேர் வரை குழுவாக சேர்ந்து, குச்சிகளின் நுனியில் கட்டப்பட்ட நெருப்புப் பந்துகளையும், கூர்மையான இரும்புக் கம்பிகளையும் வீசி எறிந்து யானைகள் மீது தாக்குதல் நடத்துவார்கள். இந்த கொடூர தாக்குதலை தாங்க முடியாமல் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் ஓடிவிடும்.

இப்படி நடந்த ஒரு ஹூலா பார்ட்டி தான் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தின் தென்மேற்கு பகுதியான Jhargram கிராமத்தில் கடந்த 15ஆம் தேதி குடியிருப்புப் பகுதியில் யானைக் கூட்டம் புகுந்தது. இதனை அறிந்த உள்ளூர் இளைஞர்கள் ஏராளமானோர் தீப்பந்தங்கள் மற்றும் கூர்மையான இரும்புக் கம்பிகளுடன் சென்று ஒரு யானையை கொடூரமாக தாக்கினர்.

இதே பகுதியில் அண்மையில் காட்டு யானைகள் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அந்த ஆத்திரத்தில் இருந்த உள்ளூர் மக்கள், அதே காட்டு யானைக்கூட்டத்தை சேர்ந்த பெண் யானை ஒன்றை கொடூரமாக தாக்கி வஞ்சம் தீர்த்ததாக கூறப்படுகிறது. தீ வைத்து வீசப்பட்ட இரும்புக் கம்பி ஒன்று அந்த பெண் யானையின் முதுகெலும்பில் குத்தியது. இதில், படுகாயமடைந்த யானையை 8 மணி நேரத்திற்குப் பின்பே வனத்துறையினர் சிகிச்சைக்காக மீட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் முகாமுக்கு அழைத்துச்சென்று பராமரிக்கப்பட்ட அந்த யானை மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வன விலங்குகள் நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோக்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விலங்குகள் நல ஆர்வலர் prerna singh bindra, யானை கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் மற்றும் காட்டு யானைகள் இடையேயான மோதல் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், நெருப்பு பந்துகளையும், இரும்பு கம்பிகளையும் யானைகள் மீது வீசுவதற்கு உச்சநீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு தடைவிதித்திருந்தது. ஆனாலும், அந்த தடையை மீறி தற்போது தீப்பந்தங்கள் மற்றும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டதில் காட்டு யானை உயிரிழந்தது பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.