;
Athirady Tamil News

டிஜிட்டல் தேர்தல் முறையை பரீட்சிக்க ரணில் இணக்கம்

0

தேர்தல் முறையை டிஜிட்டல் மயமாக்க முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் டிஜிட்டல் தேர்தல் முறையை பரீட்சிக்க முடியும் எனவும் அதன் பின்னர் தேசிய தேர்தல்களில் இந்த முறைமையை பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று(22.08.2024) நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் மாநாட்டிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஏற்றுமதி பொருளாதாரம்

மேலும் அவர் உரையாற்றுகையில்,

“இலங்கையில் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்காகும்.

எவ்வாறாயினும், 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரை இந்த இலக்கை அடைய தொழில்நுட்பம் தேவைப்படும். இன்றைய உலகில், தொழில் அல்லது நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் இன்றியமையாதது.

ஆசியாவிலேயே தலைசிறந்து விளங்கும் நோக்கில், தொழில் நுட்பத்தை நமது பொருளாதாரத்தின் அடிப்படை அங்கமாக இணைக்க முடிவு செய்துள்ளோம்.

இது தவிர விவசாயம் போன்ற நவீனமயமாக்கல் செய்யப்பட வேண்டிய துறைகளையும் அடையாளம் கண்டிருக்கிறோம்.

தற்போதும் நாட்டில் மில்லியன் கணக்கான ஏக்கரில் நாட்டுக்குள் வாழ்வாதார விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் 300,000 ஏக்கரில் விவசாயம் செய்வதற்கான சாத்தியமும் உள்ளது.

விவசாயத்தை நவீனமயமாக்கி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், உணவு ஏற்றுமதி செய்யும் நாடாக நாம் மாறலாம்.

சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நமது பரந்த டிஜிட்டல் பொருளாதாரத்திலும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கின்றதுடன் நமது தற்போதைய பொருளாதார கட்டமைப்பில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமை பொருளாதாரம் என்ற இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன.

தொழில்நுட்பத்தை மேம்படுத்த தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ பல்கலைக் கழகங்களை நிறுவவும் எதிர்பார்க்கிறோம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பரிசாக, கண்டியின் கலஹா பகுதியில் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தை நிறுவுவதற்கும், குருநாகல், சீதாவக்க மற்றும் சியனே உள்ளிட்ட நான்கு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாநாடு நாட்டின் எதிர்கால குறியீடு என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மாநாட்டிற்கு வருகை தந்த ஜனாதிபதியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட பெப்பர் என்ற ரோபோ வரவேற்றமை சிறப்பம்சமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.