புலம்பெயர்வோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: குழந்தை உட்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
செர்பியா போஸ்னியா எல்லையில், புலம்பெயர்வோர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குழந்தை உட்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள்.
புலம்பெயர்வோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து
நேற்று அதிகாலை, 5.00 மணியளவில், மத்திய கிழக்கு பகுதியிலிருந்து புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டுவந்த படகு ஒன்று, செர்பியாவிலிருந்து போஸ்னியாவுக்குச் செல்லும் Drina என்னும் நதியைக் கடக்கும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அந்நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
முதலில் செர்பிய உள்துறை அமைச்சரான Ivica Dacic கூறும்போது, படகில் பயணித்த 25 பேரில், மூன்று குழந்தைகள் உட்பட 18 புலம்பெயர்ந்தோர் போஸ்னியாவில் கரையேறியதாக தெரிவித்திருந்தார்.
பின்னர், படகு கவிழ்ந்ததில் 10 பேர் வரை இறந்திருக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். அதாவது, படகில் 25க்கும் அதிகமானோர் பயணித்திருக்கக்கூடும் என அவர் கருதுகிறார்.
குழந்தை உட்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
10 பேர் வரை இறந்திருக்கக்கூடும் என்று கருதப்படும் நிலையில், உயிரிழந்தவர்களில், 9 மாதக் குழந்தை ஒன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செர்பிய உள்துறை அமைச்சரான Ivica Dacic தெரிவித்துள்ளார்.
நதியில் மூழ்கியவர்களை, பொலிசாரும் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து தேடிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கரையேறிய 18 பேரில் 16 பேர் சிரியா நாட்டவர்கள், இரண்டு பேர் எகிப்து நாட்டவர்கள். அவர்களில் 10 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.