வவுனியா வைத்திசாலையில் சிசுவின் இறப்பு நடந்தது என்ன? உண்மையின் ஒரு தேடல்!
கடந்த சில நாட்களாக வடக்கில் பெரும் சர்ச்சைகளுக்குள் சிக்கியுள்ளது வைத்திய சேவைகளும் வைத்தியசாலைகளும், யாழ் போதனாவைத்தியசாலையில் சிறுமியின் கை துண்டிப்பு , சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் அர்ச்சுனா அவர்களின் குற்றச்சாட்டுக்கள், மன்னார் வைத்தியசாலையில் சிந்துஜாவின் இறப்பு , இப்பொழுது வவுனியா பொது வைத்தியசாலையில் சிசுவின் இறப்பு என பல சர்ச்சைகளில் சிக்கித்தவிக்கிறது வடக்கு மாகாண சுகாதார சேவைகள்
ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் வைத்தியசாலைகளின் மேல் உள்ள அதிருப்திகள் காரணமாக குறிப்பிட்ட விடயங்கள் பலருக்கு தங்களின் விளம்பரங்களிற்கும், சிலருக்கு வாய் அசை போடுவதற்குமான சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது, அதுபோல் நியாயத்தை தட்டிக்கேட்க வீதியில் இறங்க பலர் முன் வந்துள்ளமையும் இங்கு குறித்துக்காட்ட வேண்டிய ஒன்று
பாதிக்கப்பட்ட தாய் மற்றும் தந்தையின் கூற்றுப்படி..
வவுனியா பொது வைத்தியசாலையில் 7ம் விடுதிக்கு கடந்த 17.08.2024 அன்று பிரசவத்திற்காக தாய் அனுமதிக்கப்பட்டிருந்தார் , குறித்த தாயிற்கு 19ம் திகதியே சுகப்பிரசவத்திற்கான திகதி மகப்பேற்று நிபுணரால் (VOG) குறிக்கப்பட்டிருந்தது எனினும் 18ம் திகதி இரவு 12மணிக்கு தாயின் வயிற்றுக்குள் குழந்தையை சுற்றியுள்ள நீர்க்குடம் உடைந்து விட்டதாக விடுதி நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து 19ம் திகதி இரவு பிரசவ அறைக்குள் கொண்டுசெல்லப்பட்ட தாய் வலி தாங்காமல் சத்திர சிகிச்சை செய்யுமாறு வலியுறுத்தியும் முடியாது என தெரிவித்த விடுதியினர் நீண்ட நேரத்திற்கு பின்னர் 20 ம் திகதி அதிகாலை குறித்த தாயிற்கு சத்திரசிகிச்சை மூலமே பிரசவம் செய்துள்ளனர், இதேவேளை 21ம் திகதி காலை பிறந்த குழந்தை இறந்த விட்டதாக வைத்தியசாலை அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இங்கு என்ன நடந்தது என்பது சாதாரண மக்களால் புரிந்து கொள்ளமுடியாத விடயம் காரணம் உலகிலேயே முதலாவது மாபியா என்றால் அது மெடிக்கல் மாபியா தான் இதன் தாக்கம் தான் பொதுமக்களின் கோபத்திற்கும் தூண்டுதலாக உள்ளது
குறித்த சம்பவத்தில் குறித்த தாயிற்கு கர்ப்ப காலத்தில் சிகிச்சை வழங்கிய மகப்பேற்று நிபுணர் (VOG) வேறு ஒருவர், அதேவேளை பிரசவ விடுதியில் பிரசவத்திற்கு மேலாளராக இருந்த மகப்பேற்று நிபுணர் பிரிதொருவராகும், எனவே கர்ப்பகால அட்டையில் எழுதப்பட்டுள்ள மருத்துவ சிகிச்சை குறிப்பைக்கொண்டு தான் தாயிற்கு சிகிச்சை வழங்கப்பட்டிருக்கும் ஆக அவ் அறிக்கை புத்தகத்தில் சுகப்பிரசவம் எனவும் பெற்றோர் அதனை விரும்பினர் என்பதுடன் சுகப்பிரசவத்திற்கான அறிகுறிகள் இருக்கு என பதியப்பட்டிருந்தால் முடிந்தளவு சுகப்பிரசவத்தையே வைத்திய நிபுணர்களோ தாதிய உயர் அதிகாரிகளோ விரும்புவர், எனவே முடிந்தளவு சுகப்பிரசவத்திற்கு முயற்சியை மேற்கொண்டு தாயின் தாக்கு பிடிக்கும் அல்லது தாங்கிக்கொள்ளும் சக்தியை கருத்தில் கொண்டு சத்திர சிகிச்சைக்கு சென்றிருப்பார்கள் என கருதலாம்
ஆனால் குறித்த தாயின் நீர்க்குடம் உடைந்த பின்னரும் சுகப்பிரசவத்திற்கான அறிகுறிகள் சாதகமாக இருந்தமையால் வைத்தியர்கள் சுகப்பிரசவத்திற்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்
இதேவேளை பிரசவ அறைக்குள் கொண்டு செல்லப்பட்ட பின்னர் பிள்ளையின் துடிப்பை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பரிசோதித்த வண்ணமே இருப்பார்கள் இறுதியாக இரவு 10 மணியளவில் செய்யப்பட்ட துடிப்பு சம்பந்தமான ஸ்கேன் அறிக்கை கூட குழந்தையின் துடிப்பு மற்றும் சுகப்பிரசவத்திற்கான அறிகுறிகள் சிறந்த நிலையிலேயே இருந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்
ஆனால் சிறிது சிறிதாக குழந்தையின் இதய துடிப்பு வலு இழப்பதை அவதானித்த வைத்தியர் உடனடியாக சாதாரன சத்திர சிகிச்சைக்கு செல்லாமல் அவசர சத்திர சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர்
இறுதி ஸ்கேன் அறிக்கையின் பின்னரான காலப்பகுதியில் அதாவது அவசர சத்திர சிகிச்சை செய்யப்பட்ட நேரப்பகுதியினுள் என்ன நடந்தது என்பது இங்கு கேள்விக்குறியான விடயமாக உள்ளது, மனித தவறா?
அசன்டையீனமா?
அல்லது மனிதனை மிஞ்சிய சக்தியின் செயலா..?
என்பது தான் இங்கு ஆராயவேண்டிய விடயமாகும்
எனவே விசாரணைகள் நேர்மையகவும் நேர்த்தியாகவும் செய்து பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதி கிடைப்பதுடன் தவறுகள் நடந்திருப்பின் அதற்கான பொறுப்பாளிகளை உடனடியாக பணி நீக்கம் செய்வதுடன் அவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கி இனிவரும் காலங்களில் இவ்வாறனா தவறுகள் இடம்பெறாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது
ஊடகவியலாளர்
பரமேஸ்வரன் கார்த்தீபன்