1 மணி நேரமாக நெல்சனிடம் நடந்த விசாரணை.., ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் 1 மணி நேரமாக பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நெல்சன் மனைவிக்கு தொடர்பு?
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 -ம் திகதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆஜரான கூலிப்படையினர், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே கொலை செய்தோம் என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில், ரவுடி நாகேந்திரன் மகனும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை பொலிஸார் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, வேலுர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை பொலிஸார் கைது செய்த நிலையில், தற்போது வரை மொத்தம் 24 பேர் கைதாகியுள்ளனர்.
இந்த வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் என்பவருடன் இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளிவந்த நிலையில் பொலிஸார் விசாரணை செய்துள்ளனர்.
மேலும், நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் மொட்டை கிருஷ்ணன் என்பவரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இருவரும் சென்னை சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துள்ளதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால், பணம் அனுப்பியதாக பரவும் தகவல் ஆதாரமற்றவை என்று இயக்குநர் நெல்சன் மனைவி விளக்கம் அளித்துள்ளார்.
நெல்சனிடம் விசாரணை
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் 1 மணி நேரமாக தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை அடையாறில் உள்ள நெல்சனின் வீட்டிற்கு சென்ற பொலிஸார், தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் குறித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.