பெண்கள் பொதுவெளியில் பேச, பாட தடை – அடக்குமுறையை தொடரும் தாலிபான்கள்
பெண்கள் பொது வெளியில் பேச தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.
தாலிபான் அரசு
2021 ஆம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் புதிதுபுதிதாக சட்டங்களை இயற்றி வருகின்றனர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடத்தப்படும்’ எனத் தெரிவித்த அவர்கள், குறிப்பாக பெண்கள் மீது அடக்குமுறைகளை கையாளும் வகையில் சட்டங்களை இயற்றி வருகின்றனர்.
ஏற்கனவே, விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்ல கூடாது. மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது. பெண்கள் உடற்பயிற்சி கூடமான ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மீதான அடக்குமுறை
இந்நிலையில் தற்போது பெண்களின் பேச்சுரிமையை பறிக்கும் வகையில் சட்டம் இயற்றியுள்ளனர். இந்த சட்டமானது, தாலிபான்களின் அறம் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 114 பக்க ஆவணத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த சட்டத்தின்படி, பிரிவு 13 ல், சலனத்தை தவிர்க்க பொதுவெளியில் பெண்கள் தங்களை முகத்தையும் சேர்த்து முழுவதுமாக துணியால் மூடிக்கொள்ள வேண்டும். உடுத்தப்படும் ஆடை இறுக்கமாகவோ, மெல்லியதாகவோ இருக்கக்கூடாது.
ஐ.நா சபை
பொது வெளியில் பெண்கள் பேசுவதோ, பாடுவதோ கூடாது. ஏனெனில், பெண்கள் குரல் தனிப்பட்டது. இதனை மற்றவர்களை கேட்கக்கூடாது. பெண்கள் தங்களின் உறவினர் அல்லாத மற்ற ஆண்களை நிமிர்ந்து பார்க்கக்கூடாது.
இந்த சட்டங்கள் கடந்த புதன்கிழமை(21.08.2024) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. “இந்த கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை இன்னும் கடினமாக்கக்கூடும்” என ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.