சூடான்: அணை உடைந்து 60 போ் உயிரிழப்பு
கெய்ரோ: சூடானிலுள்ள அணை ஒன்று உடைந்ததால் அருகிலுள்ள வீடுகள் நீருக்குள் மூழ்கி சுமாா் 60 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ரெட் சீ மாகாணத்தின் அா்பாத் அணை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்தது. அந்தப் பகுதியில் தொடா்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக இந்த உடைப்பு ஏற்பட்டது.
இதில் 4 போ் உயிரிழந்ததாகவும் ஏராளமானவா்கள் நீரில் மூழ்கி மாயமானதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனால், எத்தனை பேரைக் காணவில்லை என்பதை அமைச்சகம் கூறவில்லை.
இருந்தாலும், இந்தச் சம்பவத்தில் சுமாா் 60 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதியைச் சோ்ந்த அல்-தாகீா் செய்தி ஊடகம் தெரிவித்தது.
வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவ தலைமைத் தளபதி அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹானுக்கும் எஸ்டிஎஃப் துணை ராணுவப் படை தளபதி முகமது ஹம்தான் டகேலோவுக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு படைகளுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உள்நாட்டுப் போா் நடைபெற்றுவருகிறது. இதில் இதுவரை சுமாா் 15,000 போ் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போா் காரணமாக லட்சக் கணக்கானவா்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனா். பஞ்சம், சுகாதார வசதி இல்லாததால் காலரா போன்ற நோய் பரவல் உள்ளிட்ட காரணங்களால் மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றனா். இந்தச் சூழலில், அணை உடைப்பு காரணமாக அந்த நாட்டில் தற்போது சுமாா் 60 போ் உயிரிழந்துள்ளனா்