;
Athirady Tamil News

ரணில் பேச்சு மட்டும் தான் – செயற்பாடு இல்லை

0

ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார் ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

நான் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் பொது வேட்பாளரின் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டது.

நான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னர் ஆதரவு வழங்கியது உண்மை. அவர் எனது பள்ளி நண்பரும் கூட.

13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கலாநிதி விக்னேஸ்வரன் தலைமையில் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுடன் பல பேச்சுக்களை நடத்தினோம்.

13 வது திருத்தம் தமிழ் மக்களின் நிரந்தர தீர்வாக நாம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் குறைந்தபட்சம் அதிலுள்ள அதிகாரங்களையாவது நடைமுறைப்படுத்த ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்

பேச்சு வார்த்தையில் 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கான நிபுணர் குழு பரிந்துரைகளை வழங்குவதற்காக நிர்மலா சந்திரகாசன் தலைமையில் நிபுணர் குழுவுக்கான பெயர்களை வழங்கினோம். ஆனால் ரணில் விக்ரமசிங்க குறித்த குழுவை அங்கீகரிக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் சாதகமான நிலப்பாட்டை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையில் அவர் மீது நம்பிக்கை வைத்தோம்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் செயல்படுத்தும் நபராக காணப்பட்டாரே தவிர நடைமுறையில் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.

அதன் காரணமாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியத்தை முதலில் முன்வைத்து முன்மொழிந்தவர்களில் நானும் ஒருவன்.

நான் கொழும்பில் இரண்டு தடவைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பொது வேட்பாளரின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு செல்ல முடியவில்லை. இருந்தாலும் எனது கட்சி சார்பில் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

நான் கலந்து கொள்ளாததை அறிந்தவர்கள் நான் ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக புரளிகளை கிளப்பி விட்டார்கள்.

ஆகவே, தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் நிலையில் தமிழ் மக்கள் அவருக்கான அமோக ஆதரவை வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.