ரஷ்யாவின் Mi-8T ஹெலிகாப்டர் மாயம்., அதில் பயணித்த 22 பேரின் நிலை?
ரஷ்யாவின் Mi-8T ஹெலிகாப்டர் மாயமானது.
இந்த விமானம் விபத்துக்குள்ளாகி ஏரியில் விழுந்திருக்கலாம் என்றும் அதில் பயணித்த அனைவரும் இறந்து போயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டரில் 3 ஊழியர்கள் உள்பட 22 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
Kamchatka பகுதியில் உள்ள Vachkazhets எரிமலைக்கு அருகிலுள்ள ஒரு தளத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள Nikolaevka கிராமத்திற்கு இந்த ஹெலிகாப்டர் பறந்ததாக ரஷ்யாவின் விமான போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7 மணிக்கு தளத்திற்கு திரும்புவதாக இருந்தது, ஆனால் திரும்பி வரவில்லை.
குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் எந்த பயனும் இல்லை. இந்நிலையில், மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஹெலிகாப்டரை தேடும் பணியில் மேலும் ஒரு விமானம் அனுப்பப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் காணாமல் போன பகுதியில் தூறல் மற்றும் மூடுபனி காணப்பட்டது.
கம்சாட்கா மாஸ்கோவிற்கு கிழக்கே 6,000 கிலோமீட்டர் தொலைவிலும், அலாஸ்காவுக்கு மேற்கே சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த பகுதி அதன் அழகுக்கு பெயர் பெற்றது, எனவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். சுமார் 160 எரிமலைகள் உள்ளன, அவற்றில் 29 இன்னும் செயலில் உள்ளன.
50-க்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர்
Mil Mi-8 ரக ஹெலிகாப்டர்களில் இந்த MI-8T ஹெலிகாப்டர் அதிகம் பயன்படுத்தப்படும் பதிப்பாக உள்ளது. இது முதன்முதலில் 60-களில் வடிவமைக்கப்பட்டது. இது முதன்முதலில் 1967-இல் ரஷ்ய இராணுவத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இதன் விலை 15 மில்லியன் டொலர் (ரூ.125 கோடி).
எம்ஐ-8டி ஹெலிகாப்டர் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும்.
ரஷ்யா 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூனிட்களை தயாரித்துள்ளது. இந்தியா, சீனா, ஈரான் உட்பட 50 க்கும் மேற்பட்ட நாடுகள் இதைப் பயன்படுத்துகின்றன. இது சிவில் மற்றும் இராணுவம் இரண்டிலும் பயன்படுத்தப்படுகிறது.
MI-8T இதற்கு முன்பு பல விபத்துகளுக்கு ஆளாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், 16 பேருடன் சென்ற MI-8T ஹெலிகாப்டர் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.