அரசு நிகழ்வில் ஆவேசமாக சாமி ஆடிய பள்ளி மாணவிகள் – அதிர்ந்த ஆசிரியர்கள்
அரசு நிகழ்வில் பக்தி பாடலுக்கு மாணவிகள் சாமி ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரை புத்தக திருவிழா
மதுரை தமுக்கம் மைதானத்தில் ஓவ்வொரு ஆண்டும் புத்தக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பபாசி ஒருங்கிணைப்பில் நேற்று தொடங்கிய புத்தக திருவிழா வரும் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்குகள் இடம் பெறுவதோடு, ராட்டினங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கருப்பசாமி பாடல்
மேலும் உணவகம், பிரபல எழுத்தாளர்கள் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து புத்தகத் திருவிழா தொடங்கியதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
உள்ளூரைச் சேர்ந்த சில நாட்டுப்புற பின்னணி பாடகர்கள் மேடையில் பாடல் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது “அங்கே இடி முழங்குது” என்ற கருப்பசாமி பாடல் பாடப்பட்ட போது, கருப்புசாமி வேடம் தரித்த ஒருவர் கையில் அரிவாளுடன் ஆவேசமாக மேடையில் இருந்து இறங்கி மாணவிகள் அமர்ந்திருந்த கூட்டத்திற்குள் ஆடத் தொடங்கினார்.
சாமி ஆடிய மாணவிகள்
உடனடியாக சாமி வந்தது போல் 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆவேசமாக ஆட தொடங்கினர். சக மாணவிகள் அவர்களை பிடித்து இழுத்து அமர வைத்த போதும் கட்டுக் கடங்காமல் மாணவிகள் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
புத்தக திருவிழாவில் எதற்கு சாமி வேடம் போட்டு நடனமாடி மாணவிகளை உணர்ச்சி வயப்பட்டு சாமியாட வைக்கிறீர்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் அங்கிருந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பாடல் நிறுத்தப்பட்டதும், பல மாணவிகள் மயக்கம் அடைந்து கீழே விழுந்த நிலையில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தப்பட்டனர்.
விளக்கம்
இது குறித்து விளக்கமளித்துள்ள மாவட்ட நிர்வாகம், “பாடல்கள் கேசட்டில் ஒலிபரப்படவில்லை. இசைக்கலைஞர்கள் அதனை பாடியுள்ளனர். மாணவிகள் உணர்ச்சிவசப்பட்டு சாமியாடியுள்ளனர். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. முழுக்க முழுக்க வேண்டுமென்றே இந்த பாடல் ஒலிபரப்பப்படவில்லை. கிராமப்புற இசை நிகழ்ச்சியில் இந்த பாடல் இடம்பெற்றுவிட்டது” என தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அரசு பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற பெயரில் மகா விஷ்ணு என்ற நபர் முன்ஜென்மம், மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது பள்ளி மாணவிகள் பக்தி பாடலுக்கு சாமி ஆடும் வீடியோ வெளியானது சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாகியுள்ளது.