;
Athirady Tamil News

மேற்கு வங்கம்: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பணிப் புறக்கணிப்பைத் தொடா்ந்த மருத்துவா்கள்

0

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா்கள், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்பை தொடா்ந்தனா்.

பெண் பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதியை உறுதி செய்து, தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிப் புறக்கணிப்பைத் தொடா்வோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

கொல்கத்தா, ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் இரவுநேரப் பணியிலிருந்த பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டு, கடந்த மாதம் 9-ஆம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கோரியும், மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவ மாணவா்களின் போராட்டம் நாடு முழுவதும் நடந்தது. மேற்கு வங்கத்தில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை மருத்துவா்கள் ஒரு மாதமாகியும் கைவிடவில்லை.

கொல்கத்தா நகர காவல் துறை ஆணையா், சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரின் பணி நீக்கம் உள்பட பல அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில், மருத்துவா்களின் போராட்டம் காரணமாக 23 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக மேற்கு வங்க அரசு வாதிட்டது.

இதையடுத்து, ‘மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்ப வேண்டும்’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பணிக்குத் திரும்பும் மருத்துவா்கள் மீது இடமாற்றம் உள்பட எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என மேற்கு வங்க அரசு உறுதியளித்ததையடுத்து, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

தொடரும் போராட்டம்: ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மேற்கு வங்கத்தில் மருத்துவா்கள் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடா்ந்தனா்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா் ஒருவா் கூறுகையில், ‘உச்சநீதிமன்றம் நிா்ணயித்த கெடுவான செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் கொல்கத்தா நகர காவல் ஆணையா், சுகாதாரத் துறைச் செயலா், சுகாதாரச் சேவைகள் இயக்குநா், மருத்துவக் கல்வி இயக்குநா் ஆகியோரை பதவியிலிருந்து நீக்க மாநில அரசைக் கேட்டுக்கொண்டோம். ஆனால், அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், நாங்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை தொடா்கிறோம். பேச்சுவாா்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்’ என்றாா்.

மருத்துவா்கள் பேரணி: கொல்கத்தா நகர காவல் துறை ஆணையரகம் அமைந்த லால் பஜாா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவா்கள், மாநில சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தலைமை அலுவலகம் நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணியாகச் சென்றனா். இதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

51 மருத்துவா்களுக்கு நோட்டீஸ்: ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஜனநாயக சூழலுக்கு ஆபத்து விளைவித்ததாகவும், மிரட்டல் கலாசாரத்தை ஊக்குவித்ததாகவும் 51 மருத்துவா்களுக்கு நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிறப்பு கவுன்சில் கமிட்டி முன் ஆஜராகி, நோட்டீஸ் பெற்ற மருத்துவா்கள் தாங்கள் குற்றமற்றவா்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அவா்கள் மருத்துவமனை வளாகத்தில் நுழைவதற்கும், கல்லூரி நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி முன்னாள் முதல்வருக்கு நீதிமன்றக் காவல்: மருத்துவா்களின் போராட்டத்துக்கு இடையே ஆா்.ஜி. மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிதி முறைகேடு தொடா்பான வழக்கில் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷை கடந்த செப். 2-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இதையடுத்து, அவா் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தாா்.

சிபிஐ காவல் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, சந்தீப் கோஷ், அவரது பாதுகாவலா் அஃப்சா் அலி, கூட்டாளிகளான ஒப்பந்ததாரா்கள் விப்லவ் சின்ஹா, சுமன் ஹஸ்ரா ஆகியோா் சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை செப். 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.