புலம்பெயர்தல் இல்லையென்றால் பொருளாதார வளர்ச்சி இல்லை: ஜேர்மன் தலைவர் வலியுறுத்தல்
திறன்மிகு புலம்பெயர் தொழிலாளர் இல்லையென்றால், எந்த நாடும் பொருளாதார வளர்ச்சி அடையமுடியாது என்னும் ரீதியில், புலம்பெயர்தலில் அத்தியாவசிய தேவை குறித்து வலியுறுத்தியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
புலம்பெயர்தல் எதிர்ப்பு
ஜேர்மனியில், புலம்பெயர்தல் கொள்கை தொடர்பில் பல்வேறு கட்சிகள் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகின்றன.
ஆனாலும், பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. எதிர்க்கட்சியான Christian Democrats (CDU/CSU) கட்சி, ஆளும் கூட்டணியுடன் புலம்பெயர்தல் கொள்கை தொடர்பில் இனி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று கூறிவிட்டது.
என்ன காரணம்?
ஏற்கனவே நாட்டில் புலம்பெயர்தலுக்கெதிரான கருத்துக்களை வலதுசாரி அரசியல்வாதிகள் வளர்த்துவருகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் சிரியா நாட்டவரான புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள் எட்டு பேர் காயமடைந்தார்கள்.
அந்த விடயம் புலம்பெயர்தலுக்கெதிரான வெறுப்பாக மாறியுள்ளது. அத்துடன், சமீபத்திய இடைத்தேர்தல்களில், புலம்பெயர்தல் எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட வலதுசாரியினருக்கு மக்கள் பெரும் ஆதரவும் தெரிவித்துள்ளார்கள்.
புலம்பெயர்தலும் வேண்டும், கட்டுப்பாடும் வேண்டும்
ஆனால், உலகில் எந்த நாடானாலும் சரி, பணியாளர்கள் குறைந்துகொண்டே செல்லும் ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியடைய முடியாது என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ்.
நாட்டின் வளர்ச்சிக்கு திறன்மிகு புலம்பெயர் தொழிலாளர்கள் அவசியம் என்று கூறியுள்ள அவர், என்றாலும், அதற்காக, யார் வேண்டுமானாலும் வரலாம் என நாட்டைத் திறந்துவிடமுடியாது என்பதும் உண்மை என்கிறார் ஷோல்ஸ்.
ஆக, புலம்பெயர்தல் தொடர்பில் சரியான கொள்கைகளை வகுக்கவேண்டும், ஆனால், எதிர்க்கட்சிகளோ, சுலோகங்கள் எழுப்புவதுடன் சரி, உருப்படியாக எதுவும் நடைமுறையில் செய்வதில்லை என வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கடிந்துகொண்டார் ஷோல்ஸ்.