;
Athirady Tamil News

தமிழர்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தி நிற்கும் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

0

தமிழ் மக்களின் விருப்பங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றாத தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிக்காது, தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி தேர்தலில் போட்டியுடன் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் எமக்கு என்ன தேவை என கூறியுள்ளோம். ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு எந்த சுபீட்சமும் இல்லை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களில் தமிழர் தாயகத்தில் என்ன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது ? அரசாங்கத்துடன் சேர்த்து இயங்கியவர்களுக்கு கூட அபிவிருத்தி சார்பான அமைச்சை கூட கொடுக்கவில்லை.

பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் விமானத்திற்கு கூட தடைகளை ஏற்படுத்தும் முகமாக சர்வதேச விமான நிலையத்தை கூட அவர்கள் அபிவிருத்தி செய்யவில்லை. காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை கூட அபிவிருத்தி செய்யவில்லை.

யுத்தம் முடிவைடைந்து 15 வருடங்களில் வடக்கு கிழக்கில் செய்த அபிவிருத்தி என்ன? ஒரு சர்வதேச மைதானங்களை கூட அமைக்கவில்லை. சர்வதேச மைதானங்களை அமைத்தால், அந்த இடம் தானாக அபிவிருத்தி அடையும். நட்சத்திர ஹோட்டல்கள் வரும் தமிழர் தாயக பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்துவிடும் என்ற நோக்கிலேயே சர்வதேச மைதானங்களை அமைக்கவில்லை.

தமிழர் தாயகத்தில் பொருளாதார மையங்கள் கூட இல்லை.

நாம் எம்மை பொருளாதார ரீதியாக முன்னேற்ற எங்களுடைய கைகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும். அதன் ஊடாகவே, வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாம் கொண்டு வர முடியும்.

தமிழர்கள் விரும்பிய எதனையும் செய்யாத தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிக்காது, தமிழர்களுக்கு என்ன தேவை என தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்

2009ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் மக்கள் மத்தியில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பிளவு பட்டுள்ள எங்களுடைய தமிழ் இனத்தை ஒன்றிணைக்க வேண்டும்.

அதற்காகவே தமிழ் தேசிய கட்சிகளில் 7 தமிழ் அரசியல் கட்சிகள், கடற்தொழிலாளர்கள் அமைப்புக்கள் , உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் உள்ளடங்கிய 80 சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளோம். தமிழரசு கட்சியில் கூட பெரும்பாலானவர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றார்கள்

எனவே தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை காட்ட தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.