;
Athirady Tamil News

குழந்தைகளின் உலகத்தை புரிந்துகொள்ளுங்கள்..!

0

குழந்தைகளின் உலகத்தை புரிந்துகொண்டு, அவர்களின் வழியிலேயே அவர்களுக்கான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கவேண்டும்.
இன்றைய சூழலில் வாழ்க்கைப் பயணம் வேக வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. பரபரப்பான பந்தய வாழ்க்கை சுழற்சியில் நாட்கள் அசுர வேகத்தில் கடந்துவிடுகின்றன. உறவுகளையும் நட்புகளையும் சந்திப்பது அறவே குறைந்துவிட்டது. ஆனால், நேரமில்லை என்ற ஓர் ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம். இன்றைய கால ஓட்டத்தில் எதற்கும் நேரமில்லை என்று கூறுவது உண்மைதான். அதற்காக பெற்றக் குழந்தையை வளர்க்கவும் நேரமில்லை என்று சொல்வது, குறைகளை மூடி மறைப்பதற்கான நொண்டிச் சாக்கு.

குழந்தைகளை எப்போதும் கண்காணித்து எதற்கெடுத்தாலும் கண்டிஷன் போட்டு அழுத்தம் கொடுப்பதும் தவறு, அதேசமயம் கண்டுகொள்ளாமல் விடுவதும் தவறு. இன்று வாழ்க்கையைப் பற்றித் தெரியாத வயதிலேயே குழந்தைகள் மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதுபற்றி பல ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தத் தவறு எங்கிருந்து தொடங்குகிறது? என்பதை பார்த்தால், பெற்றோர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்டுகொள்ளாமல், அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் இருப்பதால்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. குழந்தைகள் பெற்றோரிடம் நெருங்கி வரும்போது உதாசீனம் செய்தால், அவர்களுக்கு மனதளவில் பெரும் ஏக்கத்தையும், தனிமையையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் எப்போதும் குழந்தையுடன் இருக்க முடியாது. இருந்தாலும் வீட்டில் இருக்கும்போது குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி, அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளலாம்.

அறியாத வயதில், பெற்றோர்களிடம் இருந்துதான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அதேசமயம் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும். குழந்தைகள் மீது அதீத பாசம் வைத்தால் மட்டும் போதாது, அவர்களையும் அவர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கவேண்டும்.

குறிப்பாக, குழந்தைகள் சொல்வதை பெற்றோர் கேட்க வேண்டும். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு, அதற்கேற்ப பதில் அளிக்கவேண்டும். குறிப்பாக, அவர்களின் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் மூலமாகவே தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் உலகத்தை புரிந்துகொண்டு, அவர்களின் வழியிலேயே அவர்களுக்கான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கவேண்டும்.

பெற்றோர்கள் தங்களின் பழைய வாழ்க்கையை சுட்டிக்காட்டி குழந்தைகளுக்கு நல்லது கெட்டதை போதிக்கலாம். அதேசமயம், பழைய முறையின்படியே குழந்தைகளை வளர்க்க நினைக்கக்கூடாது. இன்றைய குழந்தைகளின் எதிர்பார்ப்புகள், எண்ணங்கள் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதால், அதனை புரிந்துகொள்வது முக்கியம். குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் இருந்தாலோ, வழக்கத்திற்கு மாறாக சோர்வாக இருந்தாலோ, என்ன பிரச்சினை என்பதை கேட்டறியவேண்டும். குழந்தைகள் சோகமாக இருந்தால் அதற்கான தீர்வுகளை வழங்கவேண்டும். ‘நாங்கள் இருக்கிறோம்’என்ற தைரியத்தை கொடுக்கவேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.