;
Athirady Tamil News

மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா மாறும்: பிரதமர்

0

தூத்துக்குடி: உலகளாவிய விநியோக இணைப்பு மூலம் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார வலிமைமிக்க நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் தொடக்க விழா தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த நாளானது வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.

தூத்துக்குடியின் இந்தப் புதிய சர்வதேச கொள்கலன் முனையம் இந்தியாவின் கடல் சார்ந்த உள்கட்டமைப்பின் ஒரு புதிய நட்சத்திரம் ஆகும். 14 மீட்டருக்கும் அதிகமான ஆழமும், 300 மீட்டருக்கும் அதிகமான அகலமும் கொண்ட இந்த முனையம் இத்துறைமுகத்தின் திறனை மேலும் அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றும்.

இதன் வாயிலாக துறைமுகத்தின் தளவாடங்களுக்கான செலவு குறையும், இந்தியாவின் அந்நியச் செலாவணியும் அதிகரிக்கும்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் இத்துறைமுகம் தொடர்பான பல திட்டங்களைத் தொடங்கி வைத்தேன்.

அப்போது இந்தத் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதற்காக பல முயற்சிகள் தொடங்கின.

கடந்த பிப்ரவரி மாதம் நான் தூத்துக்குடி வந்தபோது, துறைமுகம் தொடர்பான பல பணிகள் தொடங்கப்பட்டு இருந்தன.

இந்தப் பணிகள் வேகமாக முடிவடைந்ததை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையத்தில் 40 சதவிகிதம் மகளிர் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. அதாவது, இந்த முனையம், கடல்சார் துறையில் மகளிர் முன்னெடுத்துச் செல்லும் முன்னேற்றத்தின் அடையாளமாக இருக்கிறது.

குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டு கடற்கரைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இங்குள்ள துறைமுக கட்டமைப்பில் 3 பெரிய துறைமுகங்கள் மற்றும் 17 சிறிய துறைமுகங்கள் மூலம், தமிழ்நாடு கடல்சார் வர்த்தக வலையமைப்பின் ஒரு மிகப்பெரிய மையமாகத் திகழ்கிறது.

துறைமுகங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த வெளிப்புற துறைமுக கொள்கலன் முனையத்தை மேம்படுத்த சுமார் ரூ.7ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கடல்சார் பணிகள், கட்டமைப்புகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகம் முழுமைக்கும் நிலையான மற்றும் முன்னோக்கிய சிந்தனைக்கான வழிகாட்டியாக இந்தியா விளங்குகிறது.

மேலும், இந்தத் துறைமுகம், பசுமை ஹைட்ரஜன் மையமாகவும், கடற்காற்று ஆற்றலுக்காகவும் பெயர் பெற்றுள்ளது. இந்தியாவின் முன்னேற்றப் பாதையில் புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சி நமது மிகப்பெரிய பலமாகும்.

இன்று தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய முனையம் நமது வலிமைக்கான ஆதாரமாகத் திகழ்கிறது. இதன் காரணமாக உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியா தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த வலிமை இந்தியாவை மிக விரைவில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார வலிமைமிக்கதாக மாற்றும். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் புதிய முனையத்தின் உருவாக்கத்துக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.