;
Athirady Tamil News

லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு – சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு!

0

திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பதி கோயில்
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவரது அமைச்சரவையில் பவன் கல்யாண் உள்பட 23 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு மங்களகிரியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,’ ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது திருப்பதி மலையின் புனிதத்தைக் கெடுத்து விட்டார்கள்.

சந்திரபாபு நாயுடு
லட்டு பிரசாதம் தயார் செய்ய முழுவதுமாக கலப்படம் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் குறிப்பாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது” பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,”ஆனால், எங்களது ஆட்சியில் தரமான பொருட்களைக் கொண்டு தான் பிரசாதங்கள் தயாரித்து வருகிறோம். கடந்த ஐந்தாண்டுகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.

அதற்கு உரியத் தண்டனை அவர்களுக்குக் கிடைக்கும்” என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.