பிகாரில் 80 வீடுகளுக்கு தீ வைப்பு! தலித்துகள் மீதான அட்டூழியம் என எதிர்க்கட்சிகள் விமர்சனம்!
பிகாரில் அடையாளம் தெரியாத நபர்களால் 80 வீடுகளுக்கு புதன்கிழமை இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், தலித்துகளுக்கு எதிரான அட்டூழியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
80 வீடுகள் நாசம்
பிகார் மாநிலம், நாவடா மாவட்டம், முஃபாசில் காவல் நிலையத்துக்கு உள்பட்ட கிராமத்தில், நேற்று(செப். 18) இரவு 80-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். உடனடியாக வீட்டில் குடியிருந்தோர் வெளியே வந்ததால், உயிரிழப்பு ஏற்படவில்லை.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.
இந்த சம்பவமானது, இரு தரப்பினருக்கு இடையேயான நிலப் பிரச்னையால் ஏற்பட்டுள்ளதாகவும், வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சிலரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காவல்துறை தரப்பில் 30 வீடுகள் வரை முழுமையாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஜஸ்வி யாதவ்
நாவடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், பிகார் முழுவதும் மோடி மற்றும் நிதீஷ் குமார் ஆட்சியில் தீ பற்றி எரிவதாகவும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஏழைகள் எரிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள், தலித்துகள் மீதான அட்டூழியத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மாயாவதி கண்டனம்
இந்த சம்பவத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“குண்டர்களால் ஏழை தலித் மக்கள் பலரின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது வருத்தத்த ஏற்படுத்துகிறது. குற்றவாளிகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.