திருப்பதி லட்டு விவகாரம்; சனாதன தர்மம் அழிக்கப்படுவதா? கொதித்தெழுந்த பவன் கல்யாண்!
திருப்பதி லட்டு விவகாரம் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் உலக புகழ் பெற்ற லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் திருப்பதி லட்டில் பன்றி மற்றும் மாட்டின் கொழுப்பு, மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது ஆந்திரா அரசியலில் ஒரு பூகம்பமாய் வெடித்துள்ளது. பக்தர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை உண்டாக்கியது. குறிப்பாக அசைவம் சாப்பிடாத இந்துக்கள், இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பவன் கல்யாண்
இந்நிலையில் திருப்பதி லட்டு விவகாரம் மிகுந்த வேதனை அளிப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அதாவது, நாடு முழுவதும் உள்ள கோவில்கள் தொடர்பான
அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ அதாவது சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும் சனாதன தர்மத்தை எந்த வடிவத்திலும் இழிவுபடுத்துவதற்கு முடிவுகட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் பவன் கல்யாண் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ள தகவலால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.