மாற்றுத்திறனாளி மாணவா் உதவித் தொகை இரு மடங்காக உயா்வு!
மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உதவித் தொகை இரண்டு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான ஆண்டு கல்வி உதவித் தொகையை இரண்டு மடங்காக உயா்த்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, ஒன்றுமுதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆகவும், 6-ஆம் வகுப்புமுதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான உதவித் தொகை ரூ.3,000-லிருந்து ரூ.6,000-ஆகவும், 9-ஆம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கான உதவித் தொகை ரூ.4,000-லிருந்து ரூ.8,000-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.6,000-லிருந்து ரூ.12,000-ஆகவும், தொழிற்கல்லூரிகள், பட்டமேற்படிப்பு பயிலும் மாணவா்களுக்கு ரூ.7,000-லிருந்து ரூ.14,000-ஆகவும் உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.