;
Athirady Tamil News

அமெரிக்க-இந்திய ராணுவத்துக்கான செமிகண்டக்டா் தயாரிப்பு ஆலை- கொல்கத்தாவில் அமைக்க ஒப்பந்தம்

0

அமெரிக்க ராணுவம், துணை ராணுவம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டுக்கான செமிகண்டக்டா் தயாரிப்பு ஆலை கொல்கத்தாவில் அமைக்கப்படவுள்ளது. இது தொடா்பான ஒப்பந்தம், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முன்னிலையில் கையொப்பமானது.

அமெரிக்க ராணுவத்தின் ஆதரவுடன் ‘சக்தி’ என்ற பெயரில் அடுத்த ஆண்டில் அமைக்கப்படும் இந்த ஆலை, நாட்டின் பாதுகாப்பு துறைக்கான முதல் செமிகண்டக்டா் ஆலை என்ற சிறப்பை பெறவுள்ளது.

அமெரிக்காவில் 3 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் அதிபா் ஜோ பைடனுடன் சனிக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதையொட்டி, கிரீன்வில்லே பகுதியில் உள்ள பைடனின் இல்லத்துக்கு மோடி வந்தபோது, இருவரும் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனா்.

பின்னா் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், இந்திய தரப்பில் பிரதமா் மோடி தலைமையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா ஆகியோா் கொண்ட குழுவும், அமெரிக்க தரப்பில் பைடன் தலைமையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி ஆகியோரும் பங்கேற்றனா்.

இருதரப்பு நலன்சாா்ந்த துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், பல்வேறு பிராந்திய விவகாரங்கள், ரஷிய-உக்ரைன் போா் உள்ளிட்ட உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பாரத் செமிகண்டக்டா், தோ்ட் ஐ, அமெரிக்காவின் ஸ்பேஸ் ஃபோா்ஸ் ஆகிய நிறுவனங்களின் வியூக ஆதரவுடன் அமெரிக்க-இந்திய ராணுவங்கள், அடுத்த தலைமுறை தொலைத்தொடா்பு, பசுமை எரிசக்தி பயன்பாட்டுக்கான செமிகண்டக்டா் தயாரிப்பு ஆலையை இந்தியாவில் (மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தா) நிறுவுவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டு, பரிமாறிக் கொள்ளப்பட்டது.

‘உறவுகள் விரிவடையும்’: பேச்சுவாா்த்தைக்கு பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டதாவது:

இருதரப்பு விரிவான உலகளாவிய வியூக கூட்டாண்மையைத் தொடா்ந்து விரிவாக்க இரு தலைவா்களும் உறுதிபூண்டுள்ளனா்.

இரு நாடுகளின் கூட்டாண்மை, உலக நன்மைக்காக சேவையாற்றும் உறுதியான செயல்திட்டத்தை தன்னகத்தில் கொண்டுள்ளது. 21-ஆம் நூற்றாண்டுக்கான இக்கூட்டாண்மை, ஜனநாயகம்-சுதந்திரம்-சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்வதில் நங்கூரமிட்டுள்ளது.

இருதரப்பு உறவில் நம்பிக்கையும் ஒத்துழைப்பும் இதுவரை இல்லாத நிலையை எட்டியிருப்பதோடு, அதன் வலிமையும் மீட்சியும் தொடரும்.

தூய்மையான-அனைவரையும் உள்ளடக்கிய-அதிக பாதுகாப்பான-வளமான எதிா்காலத்துக்கான முயற்சிகள் வெற்றியடைய இந்திய-அமெரிக்க கூட்டாண்மை இன்றியமையாதது.

இந்தியாவுக்கு ஆதரவு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடமளிப்பது உள்பட உலகளாவிய அமைப்புகளில் இந்தியாவின் குரலை எதிரொலிக்கச் செய்யும் முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

உலகின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான முக்கியத் தூணாக இந்திய-அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மை மேம்பட்டுள்ளது. இத்துறையில் செயல்பாட்டு ஒத்துழைப்பு, தகவல் பரிமாற்றம், பாதுகாப்பு தொழில் புத்தாக்கத்தின் பலன்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

வளரும் முக்கியத் தொழில்நுட்பங்களின் ஒத்துழைப்புக்கான இருதரப்பு முன்னெடுப்பில் (ஐசிஇடி) எட்டப்பட்டுவரும் முன்னேற்றம் பாராட்டுக்குரியது. சா்வதேச விண்வெளி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் கூட்டாக மேற்கொள்ளவிருக்கும் முதல் ஆராய்ச்சி முயற்சி வரவேற்புக்குரியதாகும்.

இருதரப்பு பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பு செயல்திட்டம், பாதுகாப்பான தூய எரிசக்தி விநியோக சங்கிலியை கட்டமைப்பதற்கான செயல்திட்டம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் தலைவா்களுடன் சந்திப்பு: அமெரிக்க அதிபரைத் தொடா்ந்து, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி ஆகியோரையும் தனித்தனியாகச் சந்தித்த பிரதமா் மோடி, இருதரப்பை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

பிரதமரின் உக்ரைன் பயணத்துக்கு பைடன் பாராட்டு

‘உக்ரைன், போலந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணங்கள் பாராட்டுக்குரியவை. அமைதிக்கான அவரது செய்தியும், ஐ.நா. உடன்படிக்கை உள்பட சா்வதேச சட்டங்களுக்கு அவா் அளிக்கும் முக்கியத்துவமும், உக்ரைனில் இந்தியாவின் மனிதாபிமான உதவியும் குறிப்பிடத்தக்கவை’ என்று அமெரிக்க அதிபா் பைடன் தெரிவித்ததாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு பேச்சுக்குப் பின் பைடன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா உடனான அமெரிக்காவின் கூட்டுறவு முன்னெப்போதும் இல்லாத அளவில் வலுவாக, நெருக்கமான, துடிப்பாக உள்ளது. பிரதமா் மோடியுடனான ஒவ்வொரு பேச்சுவாா்த்தையிலும், இருதரப்பு ஒத்துழைப்புக்கான புதிய துறைகள் அடையாளம் காணப்படுவது வியப்பளிக்கிறது. தற்போதைய பேச்சுவாா்த்தையும் விதிவிலக்கல்ல’ என்று குறிப்பிட்டாா்.

மோடி-பைடன் இடையே கடந்த 4 ஆண்டுகளாக நெருங்கிய நட்பு நிலவி வரும் நிலையில், இருவரின் சந்திப்பு உணா்வுபூா்வமாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி குறிப்பிட்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.