;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் இன்று 2ம் கட்ட தேர்தல்… வாக்குப்பதிவு தொடங்கியது!

0

காஷ்மீரில் இரண்டாவது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது.

ஜம்மு காஷ்மீரில் இரண்டாவது கட்டமாக 26 தொகுதிகளில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக 24 தொகுதிகளில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதனைத் தொடர்ந்து, ஜம்மு பிராந்தியத்தில் 11 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 15 தொகுதிகள் என 26 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

2-வது கட்டத் தேர்தலில் சுமார் 25 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ள நிலையில் 3,502 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா, அப்னி கட்சித் தலைவர் அல்டாஃப் புகாரி உள்ளிட்ட 239 பேர் களத்தில் உள்ளனர்.

முன்னதாக, தேர்தலுக்காக ஜம்மு காஷ்மீரில் அமித் ஷா, நட்டா, ராகுல் காந்தி ஆகியோர் முகாமிட்டு இருந்தனர். மேலும் தேர்தல் பிரச்சாரமும் அங்கு அனல் பறந்தது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் என இரு தேசியக் கட்சிகளும் பிரதான கட்சிகளாகக் கருதப்படுகின்றன. காங்கிரசுடன், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

மக்கள் ஜனநாயக கட்சி, அவாமி இதிஹாத், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தலைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என்பதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், ராணுவ வீரர்கள், துணை ராணுவத்தினர், காவல் துறையினர் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, 3-ஆவது மற்றும் இறுதிக் கட்டமாக 40 தொகுதிகளில் வரும் 1-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 3 கட்டத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள், அடுத்த மாதம் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.