பெய்ரூட் விமான நிலையம் மூடப்படலாம்… சொந்த நாட்டு மக்களை வெளியேற உத்தரவிட்ட பிரதமர்
நிலைமை மோசமடையும் என்றால், பெய்ரூட் விமான நிலையம் மூடப்பட வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டு, நாட்டு மக்களை லெபனானில் இருந்து வெளியேற அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
சிக்கலை ஏற்படுத்தும்
கிட்டத்தட்ட 15,000 பேர்கள் லெபனானில் வசிப்பதாக அவுஸ்திரேலியா கணக்கிட்டுள்ளது. நிலைமை மோசமடையும் என்றால் அனைவரையும் மொத்தமாக வெளியேற்றும் நடவடிக்கைகள் சிக்கலை ஏற்படுத்தும் என்றே அவுஸ்திரேலிய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
புதன்கிழமை லெபனான் மீது உக்கிரமான வான் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. இதில் 72 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் தரைவழியான தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவ தளபதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, பிரித்தானியா தமது ராணுவத்தை சைப்ரஸுக்கு நகர்த்தியுள்ளது. ஏற்கனவே இரண்டு ராயல் நேவி கப்பல்கள் அங்கே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை புறக்கணித்து இஸ்ரேல் போர் தொடுக்கும் என்றால், லெபனானில் உள்ள பிரித்தானியர்களை மீட்க சைப்ரஸில் இருந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவிக்கையில், தங்கள் நாட்டவர்களை கடல் வழியாகவும் மீட்க திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது தொடர்பில் அவர் விளக்கமளிக்க மறுத்துள்ளார்.
17 கப்பல்கள், 22 விமானங்கள்
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில், லெபனானில் சுமார் 15,000 அவுஸ்திரேலியர்கள் வாழ்கின்றனர்.
2006ல் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் போரின் போது சிரியா, ஜோர்டான், சைப்ரஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் தங்கள் நாட்டவர்கள் 5,000 பேர்களை அவுஸ்திரேலியா லெபனான் துறைமுகத்தில் இருந்து மீட்டது.
அத்துடன் 1200 வெளிநாட்டவர்களையும் மீட்க உதவியது. அப்போது அவுஸ்திரேலிய அரசாங்கம் 17 கப்பல்கள், 22 அவுஸ்திரேலிய விமானங்கள் மற்றும் 470 பேருந்துகளையும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.