;
Athirady Tamil News

இலத்திரனியல் கடவுச்சீட்டு குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவு

0

இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால தடையுத்தரவு, ஒக்டோபர் முதலாம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு
இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையை பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம், முற்றிலும் சட்டவிரோதமான முறையில் இந்த இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டி ‘எபிக் லங்கா’ தனியார் நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமது லஃபர் தாஹிர், உண்மைகளை பரிசீலித்து, அரசாங்கத்தின் முறையான கொள்முதல் நடைமுறைகளை பின்பற்றாமல் சட்டத்திற்கு முரணான வகையில் இந்த இலத்திரனியல் கடவுச்சீட்டு கையிருப்பை வாங்க முடிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ரிட் மனுவில், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அமைச்சரவை ஒப்புதல்
ஐந்து மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான டெண்டர் நடைமுறையை மீறி செப்டம்பர் 2 ஆம் திகதி இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், அதன் ஒரு பகுதியாக, இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 மின் கடவுச்சீட்டுகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, உரிய அமைச்சரவை தீர்மானத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை நடைமுறைபடுத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்ததுடன், அன்றைய தினம் மனுவை மீளப்பெறவும் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.