;
Athirady Tamil News

நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

0

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உள்பட சம்பந்தப்பட்ட பாஜகவினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு பிரதிநிதிகள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவினர் முறைகேடு செய்து, அச்சுறுத்தி பணம் வசூல் செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது. இதனையடுத்து, தேர்தல் பத்திரம் நடைமுறைப்படுத்த மத்திய நிதி அமைச்சகம் தான் முக்கிய காரணம். தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்தது மத்திய நிதி அமைச்சகம் தான்.

இதனால் தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் ஜேஎஸ்பி அமைப்பு சார்பில் பெங்களூருவில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மத்திய பாஜக அரசுதான் தேர்தல் பத்திரங்கள் நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நிதி அளிக்கப்பட்டன. சட்டவிரோதமாக கட்சிகளுக்கு கறுப்பு பணத்தை நன்கொடையாக வழங்கும் முறையை ஒழிக்கும் வகையில் இந்த புதிய நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்தது.

இருப்பினும், இந்த தேர்தல் பத்திரம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறிய உச்சநீதிமன்றம், அதனை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஒவ்வோர் ஆண்டும் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த நபர்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்கினர் என்ற விபரத்தை வெளியிடவும் உத்தரவிட்டது.

இத்தகைய சூழலில்தான், மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து மத்திய அரசு மிரட்டி, பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணத்தை நன்கொடை பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு தொடர்ந்த மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் இணைத் தலைவர் ஆதர்ஷ் அய்யர், தனது வழக்கில் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை, ஜேபி நட்டா, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல், தற்போதைய பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.