சிரியா மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 37 பேர் உயிரிழப்பு
சிரியாவில் (Syria) பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க (United States) இராணுவம் நடாத்திய வான்வழி தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
ஈரான் ஆதரவு
அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு அமெரிக்க இராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், வடமேற்கு சிரியாவில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா அமைப்புகளைச் சேர்ந்த 37 பேர் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.