;
Athirady Tamil News

ஜனாதிபதி அநுரவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ள எம்.பி.சிறீதரன்

0

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது, இலங்கையின் 9வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துரைத்த சிறீதரன், ஈழத்தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கும் எழுத்துமூல கோரிக்கைக் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் நேரில் கையளித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

காலமாறுதல்களின் அடிப்படையில், இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை எதிர்பார்த்த எமது மக்களின் ஆணையை ஏற்று, இலங்கைத் தீவின் 9வது சனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களின் ஆட்சி, அதிகாரங்களின் மீது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பைப் போலவே, இலங்கைத் தீவின் சுதேசிய இனத்தவர்களான ஈழத்தமிழர்களும்,

தமது அடிப்படை உரித்துகள் மீதான சாதக நகர்வுகள் தங்கள் ஆட்சிக்காலத்திலேனும் ஈடேறும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் என்ற செய்தியை, அந்த மக்களின் பிரதிநிதியாக தங்களிடத்தே பதிவுசெய்ய விரும்புகிறேன்.

கடந்த ஏழரைதசாப்த காலமாக இந்த நாட்டில், ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ள நேர்ந்த இனவன்முறைப் பாதிப்புகள், அவற்றுக்கு நீதிகோரி மூன்று தசாப்தங்களாக நிகழ்ந்தேறிய போரின் விளைவுகள்,

போர் மௌனிக்கப்பட்ட பின்னரும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் வலிந்து மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இன, மத, மொழி மற்றும் கலாசாரப் படுகொலைகள், கைதுகள், காணமலாக்கல்கள் உள்ளிட்ட துயரச் சம்பவங்கள் தினம்தினம் அரங்கேற்றப்பட்டு வருவதை அறிந்திருப்பதைப் போலவே,

தங்கள் ஆட்சியில் அத்தகைய துயர வரலாறுகள் இடம்பெறாதிருக்கும் என்ற எமது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையையும் தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

அந்தவகையில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி, மீள நிகழாமையை உறுதிசெய்தல், தமிழ் அரசியற்கைதிகளின் விடுதலை, மதத்தின் பெயரால் நடைபெறும் நிலப்பறிப்புகள் உள்ளிட்ட விடயங்களில் தங்களின் துரிதமானதும், சாதகமானதுமான நகர்வுகளையும், நடவடிக்கைகளையும் கோரி நிற்கிறேன்.

சமநேரத்தில், போர்க்காலச் சூழலில் இனத்திற்காகப் போராடி மடிந்த தமது புதல்வர்களை நினைவேந்தும் உரிமை கூட மறுக்கப்பட்ட இந்த தேசத்தில், போரியல் இயக்கம் ஒன்றின் வழிவந்த ஒருவராக எமது மக்களின் அக உணர்வுகளையும்,

அதிலுள்ள நியாயாதிக்கங்களையும் உணர்ந்து செயற்படும் மக்கள் தலைவராக, நாட்டின் நல்லிணக்கத்திற்கு துளியேனும் பாதிப்பை ஏற்படுத்தாத, உணர்வுநிலைப்பட்ட நினைவேந்தல்களை மேற்கொள்வதற்கு, எமது மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரித்தை உறுதிசெய்ய வேண்டுமென்றும் தங்களைத் தயவோடு கோரிநிற்கிறேன்.

அதற்கமைய, ஈழத்தமிழர்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளையும், அபிலாசைகளையும் உணர்ந்தும், ஏற்றும் செயற்படத்தக்க அரசியற் கூருணர்வும், சகோதரத்துவமும் மிக்க தங்களின் ஆட்சிக்காலம்,

இலங்கைத் தீவின் துயர வரலாறுகளை மீள நிகழ்த்தாத காலமாக, தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு நோக்கிய வரலாற்றின் திருப்பங்கள் நிகழும் காலமாக அமையவேண்டுமெனக் கோருவதோடு,

அத்தகைய நகர்வுகள் சார்ந்த தங்களின் பயணத்தில் எமது பரிபூரண ஒத்துழைப்பு உங்களோடு இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.