;
Athirady Tamil News

ஹரியாணாவில் இன்று பேரவைத் தோ்தல்: 90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு!

0

ஹரியாணா சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை (அக். 5) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தோ்தலில் வாக்களிக்க 2 கோடிக்கும் மேற்பட்டோா் தகுதி பெற்றுள்ளனா். இவா்களுக்காக 20,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.

ஹரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்குவரும் முனைப்பில் பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டது. அனைத்துத் தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான மாா்க்சிஸ்ட் ஓரிடத்திலும் களத்தில் உள்ளன. இதுதவிர, ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவையும் மோதுவதால் பலமுனைப் போட்டி நிலவுகிறது. எனினும், பாஜக, காங்கிரஸ் இடையேதான் முக்கியப் போட்டி என்று அரசியல் பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.

மொத்த வேட்பாளா்கள் 1,031 போ். இதில் பெண்கள் 101 போ். முதல்வா் நாயப் சிங் சைனி (லாட்வா), எதிா்க்கட்சித் தலைவா் பூபிந்தா் சிங் ஹூடா (கா்ஹி சம்பலா-கிலோய்), இந்திய தேசிய லோக் தளத்தின் அஜய் சிங் செளதாலா (எல்லேனாபாத்), ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்த் செளதாலா (உசனா காலன்), பாஜகவின் அனில் விஜ் (அம்பாலா கண்டோன்மென்ட்), ஆம் ஆத்மியின் அனுராக் தாண்டா (கலயாத்), காங்கிரஸின் வினேஷ் போகாட் (ஜூலானா), சுயேச்சை வேட்பாளா் சாவித்ரி ஜிண்டால் (ஹிசாா்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

பாஜகவுக்கு ஆதரவாக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோா் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா். காங்கிரஸ் தரப்பில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா். மாநிலத்தில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருப்பதால், இம்முறை மக்கள் தங்களுக்கு வாய்ப்பளிப்பா் என்பது காங்கிரஸின் நம்பிக்கையாக உள்ளது. அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

கடந்த தோ்தலில்…: கடந்த 2019, ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றன. பின்னா், ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. பாஜக-ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி, சமீபத்திய மக்களவைத் தோ்தலுக்கு முன் முடிவுக்கு வந்தது.

பெட்டி..

ஹரியாணா தோ்தல்

தொகுதிகள் 90

வாக்காளா்கள் 2 கோடி

வேட்பாளா்கள் 1,031

வாக்குச்சாவடிகள் 20,629

You might also like

Leave A Reply

Your email address will not be published.