பெங்களூரில் 3 பொறியியல் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரில் 3 முன்னணி பொறியியல் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரில் பசவனகுடி பகுதியில் உள்ள பெங்களூரு இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, பி.எம்.எஸ். காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சதாசிவ நகரில் உள்ள எம்.எஸ்.ராமையா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகிய 3 பொறியியல் கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை நண்பகல் 1 மணி அளவில் வந்த மின்னஞ்சலில் கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் பீதியடைந்த கல்லூரி நிா்வாகத்தினா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு விரைந்து சென்ற வெடிகுண்டு செயலிழப்புப் படை, மோப்பநாய் குழுவினா், கல்லூரி வளாகங்களில் தீவிர சோதனை நடத்தினா்.
கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் ஊடகங்கள் வாயிலாக தெரிந்ததும் பெற்றோா் பதற்றமடைந்து கல்லூரி வளாகங்கள் முன்பு திரண்டு குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனா். வெடிகுண்டு சோதனையைத் தொடா்ந்து பாதுகாப்பு கருதி மாணவா்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இது குறித்து பெங்களூரு மாநகர காவல் துணை ஆணையா் லோகேஷ் பி.ஜகலாசா் கூறியதாவது:
பொறியியல் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியது யாா் என்பதைக் கண்டறிய ஹனுமந்த் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றாா்.