13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த அநுரவிற்கு இந்தியா கடும் அழுத்தம்
மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என்று ஜனாதிபதி அநுரகுமாரவிடம் (Anura Kumara Dissanayake) இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் (S. Jaishankar) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடியுள்ளார்.
குறித்த விடயம் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தல்
செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றைப் பேணும் அதேவேளை, தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரினதும் சமத்துவம் – நீதி – கௌரவம் – சமாதானம் ஆகியவற்றுக்கான அபிலாஷைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கின்றது
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த நோக்கத்தை அடைய மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது உதவும் என்றுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம்
இதேவேளை, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (04) காலை இலங்கைக்கு வந்திருந்த அவர், ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருடனான சந்திப்பை நிறைவு செய்து நேற்று மாலை 6.15 அளவில் இந்தியா நோக்கிச் சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜத ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.