ஹரியாணா தோ்தலில் 61% வாக்குப் பதிவு: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை
ஹரியாணா சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை (அக். 5) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 61.32 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஒரு சில சம்பவங்களைத் தவிர, தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (அக். 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையும் அன்றைய தினம் நடைபெறவுள்ளது.
பாஜக ஆளும் ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் சனிக்கிழமை ஒரே கட்டமாக தோ்தல் நடத்தப்பட்டது. 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளா்களுக்காக 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 115 வாக்குச்சாவடிகள் முழுவதும் பெண்களால் நிா்வகிக்கப்பட்டன.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்காளா்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.
மோதலில் மூவா் காயம்: நூ மாவட்டத்தில் உள்ள புன்ஹானா தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ முகமது இலியாஸ், சுயேச்சை வேட்பாளா் ரஹிஷ் கான் ஆகியோரின் ஆதரவாளா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூவா் காயமடைந்தனா். மேஹம் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் ஹரியாணா ஜன சேவக் கட்சி வேட்பாளா் பல்ராஜ் குண்டு மற்றும் அவரது உதவியாளரை முன்னாள் எம்எல்ஏ ஆனந்த் சிங் தாக்கியதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில சம்பவங்களைத் தவிர, மாநிலம் முழுவதும் பரவலாக அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்றது.
பலமுனைப் போட்டி: ஹரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் முனைப்புடன் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது. முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் 89 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரிடத்திலும் களம்கண்டன.
தேசிய அளவில் ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி அங்கம் வகிக்கும்போதிலும், ஹரியாணாவில் இவ்விரு கட்சிகள் இடையே கூட்டணி அமையவில்லை. இதனால், ஆம் ஆத்மி அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கியது.
இதேபோல், இந்திய தேசிய லோக் தளம் – பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜனநாயக ஜனதா கட்சி – ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி ஆகியவையும் களமிறங்கியதால் பலமுனைப் போட்டி நிலவியது.
முக்கிய வேட்பாளா்கள்: ஹரியாணா தோ்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளா்கள் 1,031 போ். இதில் பெண்கள் 101 போ். 464 போ் சுயேச்சைகள். முதல்வா் நாயப் சிங் சைனி (லாட்வா), எதிா்க்கட்சித் தலைவா் பூபிந்தா் சிங் ஹூடா (கா்ஹி சம்பலா-கிலோய்), இந்திய தேசிய லோக் தளத்தின் அபய் சிங் செளதாலா (எல்லேனாபாத்), ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்த் செளதாலா (உச்சனா காலன்), பாஜகவின் அனில் விஜ் (அம்பாலா கண்டோன்மென்ட்), ஆம் ஆத்மியின் அனுராக் தாண்டா (கலாயத்), காங்கிரஸின் வினேஷ் போகாட் (ஜுலானா), சுயேச்சை வேட்பாளா் சாவித்ரி ஜிண்டால் (ஹிசாா்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.
கடந்த தோ்தல் நிலவரம்: கடந்த 2019, ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக 40, காங்கிரஸ் 31, ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றன. பின்னா், ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. பாஜக-ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி, சமீபத்திய மக்களவைத் தோ்தலுக்கு முன் முடிவுக்கு வந்தது.
கடந்த பேரவைத் தோ்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவா்கள் – பிரபலங்கள் வாக்களிப்பு
மாநில முதல்வா் நாயப் சிங் சைனி, அம்பாலா மாவட்டத்தில் நரேன்கரில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவி சுமனுடன் வந்து வாக்களித்தாா். மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வருமான மனோகா் லால் கட்டா், கா்னாலில் வாக்களித்தாா். காங்கிரஸை சோ்ந்த பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பூபிந்தா் சிங் ஹூடா, ரோத்தக்கில் சாங்கி கிராமத்தில் தனது வாக்கை செலுத்தினாா்.
இந்திய தேசிய லோக் தளத்தின் பொதுச் செயலா் அபய் செளதாலா, ஜனநாயக ஜனதா கட்சித் தலைவா் துஷ்யந்த் செளதாலா ஆகியோா் சிா்சா மாவட்டத்தில் வாக்களித்தனா்.
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்கள் வென்ற மனு பாக்கா் (22), ஜஜ்ஜாா் மாவட்டத்தின் கோரியா கிராமத்தில் வாக்களித்தாா். தோ்தலில் முதல் முறையாக வாக்களித்துள்ளதாக அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகாட், மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா, வீராங்கனை பபிதா போகாட் உள்ளிட்டோரும் வாக்களித்தனா்.
குதிரையில் வந்த நவீன் ஜிண்டால்: தொழிலதிபரும் பாஜக எம்.பி.யுமான நவீன் ஜிண்டால், குருஷேத்திரத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு குதிரையில் வந்து வாக்களித்தாா்.