விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் உயிரிழப்பு!
விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோகம்..
92-வது இந்திய வான்படை தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வான்படையின் சாகச நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை காண ஏராளமான சென்னை வாசிகள் அலைப்போல் திரண்டு வந்தனர்.
இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 8000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்தனர்,அதில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 1 மணிக்கு முடிந்தது.
அதன்பின், ஒரே நேரத்தில் பொதுமக்கள் கிளம்பியதால் மெரினா காமராஜர் சாலை, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகளவில் வெயில் வாட்டியதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியோர் சோர்வடைந்தனர். பலர் மயங்கினர்.
உயிரிழப்பு
மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார் (37), கொருக்குப்பேட்டை ஜான் பாபு (56), பெருங்களத்தூர் சீனிவாசன் (52) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.