;
Athirady Tamil News

வடக்கில் காத்திருப்பு காலமின்றி கண்புரை சத்திர சிகிச்சையை முன்னெடுக்க நடவடிக்கை

0

வடமாகாணத்தில் காத்திருப்பு பட்டியல் இன்றி கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் , 10 நாட்களுக்கு 2ஆயிரம் கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ் . போதனா வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச பார்வை தினத்தினை முன்னிட்டு , யாழ் . போதனா வைத்தியசாலை கண்ணியல் பிரிவில் 2ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை செய்யவுள்ளோம்.

யாழ் போதனா வைத்தியசாலையில் குறுகிய காலத்தில் கண்புரை சத்திர சிகிச்சை முகாமை நடத்துவது இது மூன்றாவது தடவை. வடமாகாணத்தில் இது நாலாவது தடவையாகும்.

இலங்கையில் மாத்திரம் இன்றி , சார்க் வலய நாடுகளில் கூட “பேகோ” மூலம் இப்படியான சத்திர சிகிச்சை முகாம்கள் நடத்ததில்லை. வடக்கிலையே இவ்வாறான கண் புரை சத்திர சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

முதல் தடவை நாங்கள் 1200 சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டோம். அதுபோன்று கடந்த வருடம் இரத்தினபுரி வைத்தியசாலை நட்புறவு மன்றத்தின் ஏற்பாட்டில் “சர்வதேச பார்வைகள் தினம் – 2023” முன்னிட்டு ஐந்து நாட்களில் 1200 பேருக்கு சத்திர சிகிச்சை செய்தோம்

இந்த முறை யாழ்.போதனா வைத்தியசாலை கண்ணியல் பிரிவு , வடமாகாணத்தில் உள்ள ஏனைய கண்ணியல் பிரிவுடன் இணைந்து 2ஆயிரம் கண்புரை சத்திர சிகிச்சையை ஐந்து, ஐந்து நாட்களாக 10 நாட்களுக்குள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தனியார் – அரசாங்க நட்புறவு உதவிகளுடன் அலாக்க பவுண்டேசன் (ALAKA FOUNDATION) , ஆனந்தா பவுண்டேசன் (ANANDA FOUNDATION) மற்றும் அசிஸ்ட் ஆர்.ஆர் (Assist RR) நிறுவனம் ஆகிவற்றின் உதவியுடன் இந்த கண்புரை சத்திர சிகிசிச்சையை மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த வருடம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சத்திர சிகிச்சை செய்துள்ளோம். இது வளர்ந்த நாடுகளுக்கு ஒப்பானது.

இந்த வருடம் இதுவரையிலான கால பகுதியில் யாழ் . போதனா வைத்தியசாலையில் மாத்திரம் 09 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்புரை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளோம் கிளிநொச்சி . வவுனியாவில் 05 ஆயிரம் பேருக்கு செய்துள்ளோம்

வடமாகாணத்தில் இந்த வருடம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்புரை சத்திர சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தோம். ஆனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு செய்ய முடியும் என நம்புகிறோம்.

இதன் நிறைவு விழா எதிர்வரும் 25ஆம் திகதி வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடாத்தவுள்ளோம். அன்றைய தினம் ஆளூநரால் இரண்டு பிரகடனங்கள் வெளியிடப்படவுள்ளது .

வடமாகாணத்தில் கண்புரை சத்திர சிகிச்சைக்கான காத்திருப்பு காலம் பூச்சியமாக பேணுவது. அதாவது சத்திர சிகிச்சைக்காக பதிந்தால் ஒரு வார கால பகுதிக்குள் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளல் ஆகும். அதொரு சிறப்பான விடயமாக அமையும்

யாழ்ப்பாணத்தில் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காத்திருப்பு 2 வருடங்களுக்கு மேலாக இருந்தது. சத்திர சிகிச்சைக்கு பதிந்தால் 2 வருடங்களின் பின்னரே சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியும். சிலவேளைகளில் 4 வருடங்களுக்கு பின்னர் கூட சிலருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

லண்டன் உள்ளிட்ட நாடுகளில் கூட காத்திருப்பு காலம் இன்றும் உள்ளது. காசு கட்டி செய்வதாக இருந்தாலும் கூட இந்த காத்திருப்பு காலம் உண்டு

இந்த நிலையில் தான் வடமாகாணத்தில் காத்திருப்பு காலம் இல்லாது பதிந்தால் உடனடியாக சத்திர சிகிச்சையை மேற்கொள்ள கூடியவாறு இருக்கும். எதிர்வரும் 25ஆம் திகதி முதல் செயற்படவுள்ளோம்.

அதேவேளை இரண்டாவது பிரகடனமாக அனைத்து ஆரம்ப சுகாதார பிரிவுகளிலும், வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுகாதார திணைக்களத்தால் காத்திருப்பு காலம் இல்லாது உடனுக்கு உடன் கண்புரை சத்திர சிகிச்சையை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளோம்

எனவே வடமாகாணத்தில் வசிக்கும் அனைத்து மக்கள் ஆகிய உங்களுக்கு கண்புரை இருக்கிறது அல்லது பார்வை குறைப்பாடுகள் இருப்பதாக உணர்ந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்திற்கோ அல்லது தள வைத்தியசாலைக்கோ அல்லது மாவட்ட வைத்திய சாலைக்கோ சென்று கண்களை பரிசோதித்து, கண்புரை சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனில் காத்திருப்பு காலம் இன்றி செய்ய கூடியவாறாக இருக்கும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.