கொல்லப்பட்ட வாக்னர் படை வீரர்களின் உடல்களை ரஷ்யாவிற்கு அனுப்பிய மாலி
மாலியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட வாக்னர் படை வீரர்களின் உடல்கள், ரஷ்யாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
வாக்னர் படை
கடந்த சூலை மாதம் அல்ஜீரியாவுடனான மாலியின் எல்லைக்கு அருகில் ரஷ்யாவின் வாக்னர் படை வீரர்கள் பலர், டுவாரெக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட வாக்னர் படையின் வீரர்களின் உடல்கள் மாலியில் இருந்து ரஷ்யாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசு நடத்தும் TASS ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
80 பேர் வரை
சர்வதேச பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அலெக்ஸ்சாண்டர் இவானோவ் இதுகுறித்து கூறுகையில், “செப் 30ஆம் திகதி இரவு, மாலியின் ஆயுதப் படைகளும் ரஷ்ய கூட்டாளிகளும் தாங்கள் இழந்த தோழர்களின் உடல்களை மீட்டெடுக்க சென்றனர். இன்று அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றினர். இது ஒரு முக்கியமான பணியாகும், அது நிறைவேற்றப்பட்ட வேண்டும். திருப்பி அனுப்பப்பட்ட வீரர்கள் மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்றார்.
ஆனால், இந்த நடவடிக்கையில் எத்தனை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பதை அவர் குறிப்பிடவில்லை. எனினும், 20 முதல் 80 பேர் வரை தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கிளர்ச்சி இயக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மாலியின் இராணுவத்திற்கு ரஷ்ய போராளிகள் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.