இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஈரான் கடும் எச்சரிக்கை!
எங்களை தாக்கினால் நாங்கள் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஊடகங்களுக்கு இன்று(10.10.2024) பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான பதற்றம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஈரானிய உள்கட்டமைப்புகள் மீதான எந்தவொரு தாக்குதலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஈரானை தாக்கினால் அதற்கு விரைவான மற்றும் வலுவான பதிலை அளிப்போம்.
எங்கள் கொள்கை போரும் அல்ல தொடர்ச்சியான பதற்றமும் அல்ல. ஆனால் நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம்.
எங்களை தாக்கினால் நாங்கள் கண்டிப்பாக மீண்டும் தாக்குவோம்.
போர் செய்ய தயாராக இருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்
இதேவேளை, அண்மையில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நாட்டின் பதிலடி மோசமாகவும் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “இஸ்ரேலை ஈரான் தாக்கி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து உள்ளோம். எங்கள் தாக்குதல் ஆபத்தானதாகவும், துல்லியமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியமாகவும் இருக்கும். என்ன, எப்படி நடந்தது என்று அவர்களுக்குப் புரியாது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதாக செய்திகள் வந்தன.
ஈரானின் பாலைவனத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கடுமையான விவாதங்கள் ஏற்பட்டு உள்ளது.
ஈரான் அணுகுண்டு சோதனை செய்துள்ளதோ என்ற யூகங்களை இந்த நிலநடுக்கம் தூண்டி உள்ளது.
ஈரான் அடிக்கடி பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடு, ஆனால் அக்டோபர் 5 ஆம் திகதி அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இயல்பான நிலநடுக்கம் கிடையாது. அது இயற்கையான நிலநடுக்கம் கிடையாது என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.