;
Athirady Tamil News

அமெரிக்க மாகாணம் ஒன்றை மொத்தமாக சிதைத்த மில்டன் சூறாவளி: பலர் மரணம்

0

அமெரிக்க மாகாணம் புளோரிடாவை மில்டன் சூறாவளி மொத்தமாக சிதைத்து துவம்சம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலத்த சேதம்

மில்டன் சூறாவளியால் புளோரிடா மாகாணத்தின் பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது காற்றின் வேகம் மணிக்கு 80 மைல்கள் என சரிவடைந்தாலும், முதல் நிலை சூறாவளியாகவே தற்போதும் கருதப்படுகிறது.

ஆனால் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாகாணத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் தற்போதும் புயல் எச்சரிக்கை அமுலில் உள்ளது. அத்துடன் சூறாவளி தாக்கிய பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

3 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. சாலைகள் பல பகுதிகளில் சேதமடைந்துள்ளது. வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக மாகாண ஆளுநர் Ron DeSantis தெரிவித்துள்ளார்.

துரித நடவடிக்கை

இதனிடையே, கிழக்கு கடற்கரையில் St Lucie மாவட்டத்தில் ஐவர் மரணமடைந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை எத்தனை பேர்கள் மரணமடைந்துள்ளனர் என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

மில்டன் சூறாவளியானது தற்போது அட்லாண்டிக் கடலுக்குள் நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சிலர் படகுகள் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மில்டன் சூறாவளி தொடர்பில் ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கமளிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, வணிக வளாகங்களும் எரிபொருள் நிலையங்களும் மிக விரைவில் திறந்து செயல்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.