;
Athirady Tamil News

கவரப்பேட்டை ரயில் விபத்து: துரித கதியில் சீரமைப்புப் பணிகள்

0

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேரிட்ட ரயில் விபத்தால் சீர்குலைந்திருக்கும் தண்டவாளங்களை சீரமைக்குப் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது.

கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மைசூரு-தார்பங்கா பாகமதி விரைவு ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதுமில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில், தண்டவாளங்களும், ரயில் பெட்டிகளும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனால், அவ்வழியாக இயக்கப்படும் ரயில்கள் பலவும் ரத்து செய்யப்பட்டு, சில ரயில்கள் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல்வேறு அமைப்புகளின் உதவியோடு, தெற்கு ரயில்வே சம்பவ இடத்தை சீரமைக்கும் பணியை புயல்வேகத்தில் செய்து வருகிறது. துரித கதியில் பணிகள் நடைபெற்று வந்த போதும், தண்டவாளங்கள் பொருத்துதல், சிக்னல்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தண்டவாளங்கள் முழுவதும் சிதறிக்கிடக்கும் ரயில் பெட்டிகளை அகற்றும்பணி முதல் கட்டமாக நடைபெற்றது. கிரேன் மூலம் ரயில் என்ஜினி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

பொக்லைன் கனரக வாகனங்கள் மூலம் 3 ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டது.

தற்போது ரயில் என்ஜின் உள்பட 4 பெட்டிகளை ரோப் மூலம் ராட்சத கிரேன் தூக்கி அகற்றும் பணி நடந்து வருகிறது. உடனுக்குடன் சேதமடைந்திருக்கும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியையும் ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

5 பொக்னலைன் இயந்திரங்கள் 3 ஜேசிபி வாகனங்கள், தண்டையார்பேட்டையிலிருந்து 140 டன் கிரேன்கள் இரண்டு ஆகியவை சம்பவ இடத்தில் சீரமைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தண்டையார்பேட்டை பணிமனையிலிருந்து விபத்து மீட்பு ரயிலும் வந்துள்ளது. இதில், அவசரகால உதவி இயந்திரங்கள், கருவிகள், மருத்துவ வசதிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், உடனுக்குடன் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுடன் வந்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் கண்காணிப்பில் இந்த சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. கவரப்பேட்டை ரயில் நிலையப் பகுதியில் இரண்டு மெயின் லைனும், இரண்டு லூப் லைனும் என நான்கு தண்டவாளங்கள் இருந்தன. இதில் தலா ஒரு தண்டவாளத்தை 12ஆம் தேதி இரவுக்குள் சீரமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதர இரண்டு தண்டவாளங்களும் நாளை அதிகாலைக்குள் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் பயணத்தை சீராக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தெற்கு ரயில்வே முழு முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.