ட்ரூடோவை பதவியிலிருந்து இறக்க திரைமறைவில் நடக்கும் கூட்டங்கள்
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை, அவர் சார்ந்த லிபரல் கட்சியின் தலைமையிலிருந்து நீக்குவதற்காக அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சந்தித்து திட்டம் தீட்டிவருகின்றனர்.
திரைமறைவில் நடக்கும் கூட்டங்கள்
நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி Toronto-St. Paul தொகுதியை பறிகொடுத்ததைத் தொடர்ந்து, லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவரை கட்சித் தலைமையிலிருந்து நீக்குவதற்காக தொடர்ந்து சந்தித்து திட்டமிட்டுவருகிறார்கள்.
பின்னர் மொன்றியல் இடைத்தேர்தலிலும் லிபரல் கட்சி தோல்வியைத் தழுவவே, ட்ரூடோவை பதவியிலிருந்து அகற்றும் அவரது கட்சியினரின் முயற்சிகள் மேலும் அதிகரித்தன.
இந்நிலையில், கனடா பிரதமரான ட்ரூடோ தனது அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆசிய உச்சி மாநாடு ஒன்றிற்காக செல்ல, அவர் இல்லாத நேரத்தில் அவருக்கெதிரான கூட்டங்களின் மும்முரம் தீவிரம் அடைந்துள்ளது.
ட்ரூடோவை பதவிலிருந்து இறக்குவதில் எந்த அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர் என்பதை உறுதி செய்வதற்காக, வாக்குறுதி ஒன்றில் கையெழுத்திடவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், அடுத்த தேர்தல்வரை, தான் தலைமைப் பதவியில் நீடிக்கப்போவதாக ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.