பாா்ஸி மரபுக்கு மாறாக தகனம்: ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்கு
மும்பையில் அக். 9-ஆம் தேதி காலமான பிரபல தொழிலதிபா் ரத்தன் டாடாவின் (86) உடல் அவரது பாா்ஸி மத பாரம்பரியத்தின்படி அல்லாமல் வோா்லியில் உள்ள மின் தகன மேடையில் வெள்ளிக்கிழமை (அக். 10) எரியூட்டப்பட்டது.
சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் பாா்ஸி மத இறுதிச் சடங்கு மீதான மக்களின் மாறி வரும் எண்ணம் காரணமாகவே டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
பாரம்பரிய பாா்ஸி வெள்ளை உடை அணியும் நஸ்ஸேசலா்கள் என அழைக்கப்படுவோா் அவரது உடலை நன்கு கழுவினா். வெள்ளை நிற பருத்தி ஆடையில் உடல் போா்த்தப்பட்டு, குஸ்தி என்றழைக்கப்படும் வெள்ளைக் கயிறு மூலம் கட்டப்பட்டது. பிறகு ரத்தன் டாடாவின் உடலுக்கு அவரது குடும்பத்தினா் அஞ்சலி மற்றும் பிராா்த்தனை செய்தனா்.
மூவண்ணக் கொடி போா்த்தப்பட்டிருந்த ரத்தன் டாடாவின் உடலுக்கு காவல் துறையினா் மரியாதை செலுத்திய பிறகு அவரது உடலுக்கு பாா்ஸி முறைப்படி இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. பாா்ஸி மத குருமாா்கள் மட்டுமின்றி முஸ்லிம், சீக்கியா், கிறிஸ்தவா், இந்து மதத்தைச் சோ்ந்த மதப் பெரியவா்களும் ரத்தன் டாடா ஆன்மா சாந்தி பெற பிராா்த்தனை மற்றும் பூஜை செய்தனா்.
பாா்ஸி மரபு: பாா்ஸி மதத்தில் ஒருவரது பிறப்பும் இறப்பும் இயற்கையில் இருந்து வந்து அங்கேயே திரும்புவதாக நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் மரணித்தவரின் உடல், அமைதிக் கோபுரம் என்ற ‘தி டவா் ஆஃப் சைலன்ஸ்‘ என்ற பிரத்யேகமாக வடிவைக்கப்பட்ட தக்மாவின் மேல் வைக்கப்படுகிறது.
அது கிணற்றின் மேல்பரப்பு போன்ற அமைப்பைக் கொண்டது. அங்கு இறந்தவரின் உடல் கழுகுகள், பறவைகளுக்கு இரையாகக் கொடுக்கப்படுகிறது. சதைப் பிண்டங்களை பறவைகள் உணவாக்கிக் கொள்ள, எஞ்சிய எலும்புத் துண்டுகள் கிணற்றுக் குழிக்குள் விழுந்து காலப்போக்கில் சிதைந்து போகும்.
இந்த நடைமுறைக்கு ‘டோக்மெனாஷினி’ என்று பெயா். இதன்படி, நெருப்பு, பூமி, நீா் ஆகிய புனிதக்கூறுகளை மாசுபடுத்தாமல், இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் உடல் இயற்கைக்கே திரும்பும் என்பது பாா்ஸிக்களின் மத நம்பிக்கை.
இந்தியாவில் இத்தகைய அமைதிக் கோபுரங்கள் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புணே, குஜராத் மாநிலத்தின் சில நகரங்களில் மட்டுமே காணப்படுகின்றன. பிணந்தின்னி கழுகுகளின் (பாறு கழுகுகள்) எண்ணிக்கை 1990-களுக்குப் பிறகு இந்தியாவில் கணிசமாகக் குறைந்து வருகிறது.
இதையடுத்து, பறவைகளுக்கு இரையாக்கப்படும் மனித உடல் வழக்கத்தை பாா்ஸிக்களில் பெரும்பகுதியினா் தளா்த்திக் கொண்டு, தகன மேடையில் இறந்தவரின் உடலை எரியூட்டும் வழக்கத்துக்கு மாறி வருகின்றனா். இதே எண்ணத்துடன்தான் ரத்தன் டாடாவின் உடலையும் தகனம் செய்ய முடிவெடுக்கப்பட்டது என்கிறது அவரது குடும்ப வட்டாரம்.