;
Athirady Tamil News

யாழில் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தொடர்பில் முறைப்பாடு

0

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் தொடர்பாக அதிபர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தொடர்பில் யாழ்ப்பாணம் வலயக் கல்வி பணிப்பாளருக்கு பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரால் கடிதம் மூலம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறையற்ற நடத்தைகள்

பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இரண்டு ஆசிரியர்கள், பெண் பிள்ளைகளை பாடசாலையின் தனிப்பட்ட அறையில் அழைத்து விசாரிப்பது, முறையற்ற நடத்தைகள் என்பவற்றில் ஈடுபடுவதுடன் இடுப்பை பிடித்து நடனம் ஆடுகின்ற முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர் என பெற்றோர் முறைப்பாட்டு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த முறைப்பாட்டு கடிதத்தில், குறித்த பிள்ளைகள் பாரிய மனஉளைச்சலை சந்திப்பதுடன் பாடசாலைக்கு செல்ல மறுக்கின்றனர்.

இச்சம்பவத்தினை பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளரிற்கு தெரியப்படுத்தி அவரையும் பாடசாலைக்கு அழைத்து சென்று அதிபரிற்கு தெரியப்படுத்தினோம்.

அன்றைய தினம் ஆசிரியரொருவரினால் றீப்பை தடியினால் மாணவிகள் தாக்கப்பட்டு அடிகாயங்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு சம்பவங்கள் இடம்பெற்ற போதும் அதிபரினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே அதிபரும் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். ஆகவே இவர்களை இடைநிறுத்தி விசாரணை மேற்கொண்டுஉரிய தண்டனைகளை வழங்குவதுடன் இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவற்றை தாங்கள் செய்வதன் மூலம் எமது பிள்ளைகள் அச்சமின்றி பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம் – என்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரால் பொலிஸார், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பனவற்றிலும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.