25,000ரூ வண்டிக்கு ரூ 60 ஆயிரம் செலவு செய்த தேநீர் கடை உரிமையாளர்.. இன்னொரு ஸ்பெஷல் ஐட்டமும் இருக்கு..!
மத்திய பிரதேசம் மாநிலம், ஷிவ்புரி பகுதியைச் சேர்ந்தவர் குஷ்வாகா. இவர் அந்தப் பகுதியில் தேநீர் கடையை நடத்திவருகிறார். இந்நிலையில் குஷ்வாகா, தனது தேவைக்காக ஒரு டி.வி.எஸ். மொபெட் வண்டியை வாங்கியுள்ளார்.
அந்த வண்டியை அவர், ஷோரூமில் இருந்து அவரது வீட்டிற்கு கொண்டு சென்றதுதான் தற்போது பெரும் கவனம் பெற்று சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
குஷ்வாகா, டி.வி.எஸ். மொபெட்டை 25,000 ரூபாய் முன்பணம் கொடுத்து பதிவு செய்துள்ளார். மீதி பணத்தை அவர் தவணை முறையில் கட்டுவதற்கு இருக்கிறார். ரூ. 25 ஆயிரம் முன்பணம் கொடுத்து வாங்கிய வண்டியை வீட்டிற்கு கொண்டுவர ரூ. 60 ஆயிரம் செலவு செய்துள்ளார்.
அவர் தான் வாங்கிய வண்டியை ஷோரூமில் இருந்து எடுப்பதற்காக வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். அதற்காக வீட்டில் டி.ஜே. தயார் செய்து, ஆட்டம் பாட்டம் என தனது உறவினர்களுடன் ஷோரூமிற்கு சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து வண்டியை எடுத்தவர் அதனை வீட்டிற்கு கொண்டுவர ஒரு ஜே.சி.பி.-ஐ வாடகைக்கு எடுத்துள்ளார். அதில் தனது வண்டியை ஏற்றி ஊர்வலமாக வீட்டிற்கு எடுத்துவந்துள்ளார். அப்படி எடுத்துவரும்போதும், டி.ஜே. பாட்டுடன் வந்துள்ளார்.
இது தற்போது அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதேபோல், அவர் வண்டியை கொண்டுவந்த காட்சிகளும் சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.
இதற்கு முன்னதாக இவர் தனது மகளுக்கு 12,500 ரூபாய் மதிப்புள்ள கைபேசியை தவணை முறையில் வாங்கியுள்ளார். அப்போது அதனைக் கொண்டாடுவதற்காக ரூ. 25 ஆயிரம் செலவு செய்துள்ளார்.