;
Athirady Tamil News

அநுரவுக்கு கால அவகாசம்! ஆதாரபூர்வமாக நிரூபிக்கக் கோரும் நாமல்

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு காலவகாசம் வழங்க வேண்டும். ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்து 1 மாதம் கூட நிறைவடையவில்லை. ஆகவே விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்க முடியாது என்று பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரசார மேடைகளில் எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச இதன்போது வலியுறுத்தினார்.

எம்மை விட்டுச் சென்றவர்கள் நெருக்கடியில்
நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது இயல்பானது. வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். பல்வேறு காரணிகளால் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தோம்.

எம்முடன் இருந்தவர்கள் எம்மை விட்டு எதிரணி பக்கம் சென்றதால் பலவீனமடைந்தோம். எம்மை விட்டுச் சென்றவர்கள் தற்போது அரசியலில் நெருக்கடியாகியுள்ளமை கவலைக்குரியது. ஆகவே இவர்கள் எம்முடன் மீண்டும் ஒன்றிணையலாம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு காலவகாசம் வழங்க வேண்டும். ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்து 1 மாதம் கூட நிறைவடையவில்லை. ஆகவே விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்க முடியாது. சிறந்த திட்டங்களை முழுமையாக வரவேற்பேன். இயலுமான ஒத்துழைப்புக்களை வழங்குவேன்.

அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் விமர்சித்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. அரசாங்கம் நெருக்கடிக்குள்ளானால், அரச நிர்வாகம் பலவீனமடையும் அப்போது மக்கள் தான் நெருக்கடிக்குள்ளாகுவார்கள். ஆகவே சிறந்த அரச நிர்வாகத்துக்கு அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரசார மேடைகளில் எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.

எம்மீதான குற்றச்சாட்டுக்கள் மீது நம்பிக்கை கொண்டே பெரும்பாலானோர் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆகவே அந்த மாற்றத்தை நடைமுறையில் செயற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.